திங்கள் கிழமை ஒன்பது மணிக்கெல்லாம் அவர்கள் செந்தாரபுரவுக்கு போய் விட்டார்கள். முதல் இரண்டு வீடுகளில் எல்லாருமே வழக்கமாக செய்வது போல வரவேற்று உபசரித்திருக்க அவர்களோடு பேசி இழப்புக்களை கேட்டு அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் அவர்களுடைய இடத்திலேயே அரச செலவில் கோவில் கட்ட நிலம் வழங்குவதாக தாங்கள் முதலிலேயே எடுத்த முடிவை அறிவித்து வேறேதும் உதவிகள் தேவையா என்று கேட்டிருந்தார்கள். இந்த மக்கள் தானா கோவிலுக்காக கலவரம் செய்ய நினைப்பவர்கள் என்று உண்மை தெரியாவிட்டால் வருணுமே கூட நம்பியிருக்க மாட்டான். யாராவது தூண்டி விட ஒருவர் இருப்பார்கள். குழுவோடு இருக்கும் போது ஓநாய்கள் போல தைரியமும் பயங்கரமுமாய் இருப்பவர்கள் தனியே என்று வரும் போது பம்மி அடங்குவது வழக்கமே..
ஹாலுக்குள்ளேயே போடப்பட்டிருந்த கட்டிலில் கட்டுக்களோடு இருந்த
குடும்பத்தலைவரோடு போலீஸ் மா அதிபர் பேசிக்கொண்டிருக்க எழுந்து வெளியே வந்தவன்
வாசலில் அலர்ட்டாக நின்று கொண்டிருந்த போலீசார் மற்றும் தன்னுடைய பாதுகாப்பு
பிரிவினரை பார்த்து புன்னகைத்து விட்டு வீட்டை சுற்றி எட்டிப்பார்த்தான்.
வீட்டுக்கு கீழே கொஞ்சம் மக்களும் கொஞ்சம் மீடியா
காமராக்களும் இருந்தன. அதற்குள் மோப்பம் பிடித்து ஓடி வந்து விட்டிருந்த மீடியாக்களை
தங்களுக்கு அருகில் அனுமதிக்காததால் அவர்கள் கீழே தெருவோரமாய் நின்று
கொண்டிருந்தார்கள்.
இந்த மக்களும் ஏதோ ஒரு வகையில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை
நம்பி வாழ்பவர்கள் தாம். தேயிலைத் தோட்டங்களின் லயன் வீடுகளை போலில்லாவிட்டாலும் இவர்களின்
வீடுகளும் சின்னது தான். பெரும்பாலும் ஒற்றைப்படுக்கையறை வீடுகள். அங்கொன்றும்
இங்கொன்றுமாய் நின்ற பப்பாசி மிளகாய் செடி, மிளகுக்கொடிகள். தார் போடப்படாத மண்
வீதிகள், அதில் உள்ளே பஸ் கூட போக முடியாது. இல்லாத கோவிலுக்காய் இத்தனை வருடமாய் போராட்டம்,
அடிதடி, அதற்கான நிவாரணங்கள் என்று கொட்டப்பட்ட பணத்தை ஊருக்குள் போட்டிருந்தால்
இப்போதைக்கு ஊரே அபிவிருத்தி ஆகியிருக்கும்! இதையெல்லாம் யார் சொல்வது? மதம்
பிடிப்பது யானைகளுக்கு மாத்திரம் இல்லையே..
மழை தூற ஆரம்பித்திருந்தது. இன்னும் இவர் என்ன
பேசிக்கொண்டிருக்கிறார் என்று அவன் லேசாய் எட்டிப்பார்க்க அவனோடு நின்று
கொண்டிருந்த மாகாண அரச அதிபரும் அதே போல எட்டிப்பார்த்து இவனிடம் சின்ன
புன்னகையுடன் திரும்பிக்கொண்டார். அவர்களோடு வந்திருந்த அதிகாரிகள் மூன்று
ஆண்களும் இரண்டு பெண்களும் ஓரமாய் நின்று கொண்டிருந்தனர். அவர் வரும் வரை மழைக்கு
பயந்து வீட்டின் ஓடைக்கு கீழே நின்று கொண்டு போனை வைத்து பார்த்துக்கொண்டிருந்தவன்
வாய் விட்டு சிரிக்க வேண்டிய கட்டாயத்து ஆளானான்
எல்லாம் ப்ரணவியின் வாட்சப் ஸ்டேட்டஸ் தான். ஒரு முழு நீள கறுப்பு
ரெயின் கோர்ட்டை தலை முதல் கால் விரல் நுனி வரைக்கும் போட்டுக்கொண்டு மழைக்குள் சைக்கிள்
ஓட்டிக்கொண்டிருக்கிறாள்.
எந்த மழையும் என்னை தொட முடியாது என்று காப்ஷன் வேறு. நீல
வர்ணத்தில் ஏதோ ஒன்றை சொல்லப்போனவன் பிறகு வெறுமனே சிரிப்போடு நிறுத்திக்கொண்டு
விட்டான்.
“வருண் போலாமா?” என்றபடி அரச அதிபர் வெளியே வர
ஒ எஸ் என்றபடி முன்னே வந்தவன் அந்த வீட்டினரிடம்
சொல்லிக்கொண்டு செம்மண் பாதை வழி அவர்களோடு கீழே இறங்கினான். அவர்களின் தலையை
சரிவில் கண்டதும் மீடியா வெளிச்சங்கள் மின்ன, போலீசார் அவர்களை அங்கிருந்து
அப்புறப்படுத்தும் முயற்சியில் இருந்தார்கள்.
அவர்கள் போக
வேண்டிய மூன்றாவது வீட்டுக்கு வண்டியில் ஏறிக்கொண்டு கொஞ்சம் தூரம் போக வேண்டி
இருந்தது. வழியெங்கும் மிளகுப்பயிர்ச்செய்கை நெருக்கமாக போடப்பட்டிருக்க வெற்றிலையா
மிளகுக்கொடியா என்று கண்டுபிடிக்க முடியாத கரும் பச்சை இலைகள் செழுமையாய் மழையில்
குளித்து அந்த இடத்துக்கே அழகு கொடுத்துக்கொண்டிருந்தன.
வண்டியில் போய் இறங்கிக்கொண்டு முதல் வீட்டை போலவே இந்த வீடும்
கொஞ்சம் மேலே அமைந்திருக்க எல்லோரும் இறங்கி வீட்டுக்கு முன்னே கற்கள் இட்டு
சமப்படுதியிருந்த சரிவில் ஏறிக்கொண்டு போனார்கள். வீட்டுக்கு பக்கத்திலேயே அடிவாரத்தில் சின்னதாய் ஒரு கோவிலும் இருந்தது.
அந்த வீட்டில் காயப்பட்டவன் மிகவும் இளைஞன். வந்த மற்ற
அதிகாரிகள் அவனுடைய பெற்றோரோடு பேசிக்கொண்டிருக்க இவன் தான் உள்ளே காலில்
கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டிருந்த பையனோடு பேசிக்கொண்டிருந்தான்.
பாடசாலையை முடித்து விட்டு ஏதோ கைத்தொழில் படித்தானாம்.
அதன் பிறகு சரியான வேலை இன்னும் கிடைக்கவில்லை. சாதாரண நலன் விசாரிப்புக்களை
தொடர்ந்து ஏன்? என்று கேட்டு விட்டான் வருண். நடந்த கலவரங்களில் மக்களுடைய
பங்களிப்பை குறித்து எந்த பேச்சும் பேசக்கூடாது என்று இருந்தும் அவனால் தன்னுடைய
ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. கேட்டே விட்டான். அவன் மிகவும்
இளைஞன் என்பதாலோ என்னமோ அவனுடைய எண்ணவோட்டத்தை தெரிந்து கொள்ள அவனுக்கு மிகவும்
ஆவலாய் இருந்தது.
அவனோ முதலில் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். ஏதும்
பேசினால் கைது செய்யப்படுவானோ என்ற பயமாக இருக்க வேண்டும். மெல்ல மெல்ல அவனை இவன் பேசத்தூண்டவும்
மனம் திறந்து விட்டான்
“ஊர்ல பெரியவங்க எல்லாரும் போராடும் போது எங்களாலையும் சும்மா
பார்த்துட்டு இருக்க முடியலை சார்”
போராட்டமா? என்ன சுதந்திரபோராட்ட தியாகிகள்னு நினைப்பாடா
உங்களுக்கெல்லாம்? எண்ணியதை வாய் விட்டு கேட்கவில்லை அவன்.
“சோ பெரியவங்க போனதால நீயும் போன.. தனிப்பட்ட ரீதியா உனக்கு
நம்பிக்கை இல்லையா அந்த கோவிலை பத்தி?” வருண் நிதானமாய் கேட்க
“இந்த பிரச்சனை
கோவிலை தாண்டி எப்போவோ போயிடுச்சு சார். இப்போ இருப்பது நானா நீயா தான்.
யார் தரப்பு பெரிசு என்று நிரூபிக்கத்தான் இவ்வளவும்” என்றான் என்னமோ சாதனை
வரலாற்றை சொல்பவன் போல..
இரண்டு தரப்புக்குமே வாழ்க்கைத்தரம் ரொம்பவும் மோசம்.. யார்
நன்றாக வாழ்கிறோம் என்று போட்டி போட்டிருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது..
அதில் தத்துவம் பேசுவதை போல ஒரு மிதப்பான லுக் வேற. அவனுக்கு மட்டும் கைகள்
பதவியால் கட்டப்படாதிருந்தால் இரண்டு தரப்பையும் தூக்கிக்கொண்டு போய் ஜெயிலில்
போட்டு கும்மோ கும்மென்று ஒரு நைட் முழுவதும் வைத்து கும்மி யாருக்கு வீக்கம்
அதிகம் என்று போட்டிக்கு எண்ண வைத்திருப்பான்! ஆனால் நாகரிக சமூகத்தில் அதை
செய்யமுடியாது இவர்களை ஐயா ராசா செல்லம் என்று கொஞ்ச வேண்டி இருக்கிறது.
அவனின் விளக்கங்களை எந்த கமன்ட்டும் செய்யாமல் சின்ன சின்ன
பதில்களோடு கேட்டுக்கொண்டிருந்தான் வருண்.
அவன் நினைத்தது போலத்தான் அவனும் சொன்னான். இளைஞர்களுக்கு
அங்கே தங்கள் கோவில் இருந்ததா இல்லையா என்பதில் எல்லாம் அக்கறையே இல்லை.
எதிர்தரப்பு அங்கே இடம் பிடித்து விடக்கூடாது. அவர்களுக்கு இது அதிரினலீனுக்கு
வேலை வைக்கும் பலப்பரீட்சை அவ்வளவு தான்..
உங்கள் குடுமிகளை எல்லாம் யார் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்
என்று உங்களுக்கெல்லாம் என்றைக்கும் புரியாது. ஊர் வரையில் உங்களை ஹீரோக்கள் என்று
நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு மேலே இருக்கும் சுயநல
சக்திகளுக்கு நீங்கள் வெறும் கைப்பொம்மைகள்.. ஆட்டுவித்தால் எதற்கென்றே தெரியாமல்
பொம்மை ஆடும். அவைகள் கேள்விகள் கேட்பதில்லை.
அவன் பேசப்பேச ஒன்று மட்டும் புரிந்தது, ஒற்றுமை சில
சமயங்களில் ஆபத்து தான் போலிருக்கிறது.
ஒரே குழுவாய் சொந்தம், நண்பர்கள், பெரியவர்கள் என்று
சுற்றுகிறார்களே.. இவர்களை பிரிக்க வேண்டும். துண்டு துண்டாய் பிரித்து
வெளியுலகத்தை காட்ட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொருத்தனுக்கும் நாமும் அந்த
உலகத்தில் ஒரு பங்காக வேண்டும் என்று ஆசை வரும். ஆசை வரும் வரை தான் கொள்கையெல்லாம்.
பிறகு ஒன்றாக இருந்த குருவிக்கூட்டுக்குள் கல் விழும்.. குருவிகள் ஒன்றையொன்று
கொத்தும். பிறகு இந்த கலவரம் செய்வது போன்ற வேண்டாத வேலைகளை செய்ய ஆள் ஆதரவு இல்லாமல் இல்லாமலே போகும். ஆதி முதல்
பெரிய இயக்கங்களை எல்லாம் உடைத்த வெற்றிகரமான மெத்தட் அல்லவா அது. அவன் மனதுக்குள்
திட்டம் தீட்டி விட்டான்.
“எத்தனை நாள் படுக்கையில் இருக்க வேண்டும்?” தாடையை
தடவிக்கொண்டே அவன் கேட்க
“இரண்டு வாரம் சார்” என்று பவ்யமாய் சொன்னான் அந்த இளைஞன்.
“ஹ்ம்ம்..” தன்னுடைய கார்டை எடுத்து அந்த இளைஞன் கையில்
கொடுத்தவன் கால் சரியானதும் நீயும் உன் நண்பர்களும் என்னை வந்து பாருங்கள்” என்று சிரித்தான்
“வேலை கிடைக்குமா சார்?”
“கிடைக்கலாம்... வந்து பாருங்க முதலில்”
லேசாய் சிரித்துக்கொண்டே அவன் வாசலில் வந்து நின்று கொள்ள
மற்ற அதிகாரிகள் இன்னும் அவனுடைய குடும்பத்தாரோடு பேசிக்கொண்டிருந்தனர். வாசலில்
இரண்டு பெண் அதிகாரிகளும் நிற்பதை கண்டு விட்டு சட்டென்று வீட்டுப்பக்கமாகவே
திரும்பி விட்டான் வருண்.
வேறொன்றுமில்லை. வெளியே நின்ற இரண்டு பெண் அதிகாரிகளில் ஒருவர்
அவனை விட சின்னவராக இருக்க வேண்டும். அவனை கண்டதில் இருந்து ஒரே வெட்கம்.
காலையில் இங்கே வந்ததில் இருந்து அவன் தற்செயலாக அந்தப்பக்கம்
திரும்பினால் கூட அந்த பெண் வெட்கப்பட்டு திரும்பிக்கொள்ள தலையலடித்துக்கொள்ள
வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிவிட்டான் அவன்.
ஆபீசுக்கு போனதும் பிடித்து வைத்து கேட்கப்போகும்
கேள்விகளில் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிவிடுவார்கள். எதற்கும் இப்போதைக்கு நாம் உள்ளேயே வேடிக்கை பார்ப்போம்
வீட்டு சுவர் முழுக்க A4 பேப்பர்கள்
ஒட்டப்பட்டிருந்தது இவ்வளவு நேரமும் அவன் கவனத்தில் படவில்லை. அந்த பேப்பர்கள் முழுக்க சின்ன சின்ன சித்திரங்கள் தான் வரைந்து
ஒட்டப்பட்டிருந்தன. சில நொடிகள் கண்காட்சி பார்ப்பது போல பார்த்துகொண்டு வந்தவனின்
பின்னால் நின்று கொண்டு
“எங்க பாப்பா வரைஞ்சது அதெல்லாம்” என்று
ஒரு அம்மா வெட்கமாய் அவன் கேட்காத கேள்விக்கு பதில்
சொன்னார்.
அவன் திரும்பி பார்க்க பாப்பா அம்மாவின் சட்டைக்கு பின்னே ஒளிந்தது.
ஏழு வயது இருக்கும்.
நீயே வரைஞ்சியா? என்று இமைகளை உயர்த்தினான் அவன்
ஹ்ம்ம்” பாப்பா தலையசைத்தாள்
“நான் போட்டோ எடுத்துக்கலாமா?”
மீண்டும் குட்டித்தலை ஆடியது.
“இன்ஸ்டாக்ராமில் போடுவேன்... பேஸ்புக் மாதிரி” என்று அந்த
அம்மாவுக்கு தன் போக்கில் விளக்கம் சொன்னவன் அவரின் தலை சம்மதமாக ஆடவும் போனில்
நிறைய போட்டோக்களை எடுத்துக்கொண்டான் வருண்.
போட்டோக்கள் எடுத்து முடிந்ததும் “உன் பெயர் என்ன? “ என்று
அந்த குழந்தையை கேட்க
ஸ்வேதா” என்றாள் அவள்
உள்ளே பேசுபவர்களுக்கு இடைஞ்சல் தராமல் அவளை கூட்டிக்கொண்டு
வெளியே வந்தவன் அவளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
அவனுக்கும் பொழுது போக வேண்டுமில்லையா?
“வீடு முழுக்க பேப்பரா ஒட்டி வச்சிருக்க அம்மா திட்டலையா?”
அவன் சிரித்துக்கொண்டே கேட்க
“எனக்கு பெயின்ட் வச்சு வரைய ரொம்ப ஆசை.. அம்மா
திட்டுவாங்கன்னு உள்ளே பேப்பர்ல வரைஞ்சு ஒட்டி வச்சிருக்கேன்”
வீட்டுச்சுவரில் பெயின்ட் வச்சு படம் வரைஞ்சா நானெல்லாம் வரைஞ்ச
கையை உடைத்து மற்றக் கையில் கொடுப்பேன்,
உங்கம்மா பரவாயில்லை.. என்று எண்ணியதை அவளிடம் சொல்லவில்லை அவன்.
“அதுவும் நான் வரைஞ்சது தான்”
அவள் முகம் முழுக்க சிரிப்போடு கைநீட்ட எட்டிப்பார்த்தவன் புன்னகைத்தான்.
வீட்டின் வெளிச்சுவரில் கறுப்பு நிறத்தில் வரி வரிவமாய் ஒரு பெரிய காட்சி போல காலைக்காட்சியை
வரைந்திருந்தாள்.
“பாப்பா மனசுக்குள்ள யாரோ நீ ஒரு ரவிவர்மான்னு நம்ப
வச்சிருக்காங்க.. ஹா ஹா” என்று மனதுக்குள் நக்கல் செய்தாலும் “சரி விடு விடு..சித்திரமும்
கைப்பழக்கம் தானே.. அந்த வயசுல வரைய தோணும் போது வரையறது சந்தோஷம் அவங்களுக்கு” அதையும்
போட்டோ எடுத்துக்கொண்டான் அவன்..
“ஸ்கூல்ல பெயின்ட் கலர்ஸ் எல்லாம் கொடுக்க மாட்டாங்களா”
என்ற அவன் கேள்விக்கு
“எங்களுக்கு பெயின்ட் கொடுக்க மாட்டாங்க..பெரிய வகுப்பு
பசங்களுக்கு மட்டும் தான் அது” என்று பாப்பா சோகமாய் பதிலளித்தாள்
“படம் வரையறதுல ஏதும் ப்ரைஸ் வாங்கிருக்கியா?”
“போன வருசம் கூட மாகாண மட்ட போட்டிக்கு இவளை
எடுத்திருந்தாங்க தம்பி.. கொரோனா சமயம் எங்களால தான் கூட்டிப்போக முடியல..”
வாசலோரம் நின்று கொண்டிருந்த அவளின் அம்மா பதில் சொன்னார்
ஓஒ. என்றவனுக்கு
நம்ம மாகாணத்தில் ஆர்ட் இவ்வளவு மோசமாவா இருக்கு என்று சிரிப்பு வந்தது. டேய்
நீ பேசுவது ஒன்பது வயது குழந்தையுடன். பொறுப்பான மேயராக அந்த பிள்ளையை
உற்சாகப்படுத்து என்று மூளை கடிந்து கொள்ள “இந்த வருஷம் போட்டில கலந்துக்கோ என்ன? உன்னை
கூட்டிப்போறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன்” என்று அந்த பாப்பாவிடம் புன்னகைத்தான்.
நிஜமாவா?”
மழை படுது இப்படி வா..” என்று அவளை தள்ளி வீட்டோரம்
நிறுத்தி வைத்தவன் “ ஒரு அக்கா இருக்காங்க. அவ கிட்ட நான் சொல்றேன். அவ வந்து உங்க
ஸ்கூலுக்கு பெயின்ட் கலர்ஸ் எல்லாம் வாங்கி கொடுப்பா..” என்று தன்னை மீறி
தொற்றிக்கொண்ட சின்னப்புன்னகையுடன் சொன்னான்.
அப்போதுதான் வாசலில் கேட்ட சின்ன சலசலப்பில் கீழே இருந்த
நிலையிலேயே நிமிர்ந்து பார்த்தவன் அந்த வீட்டுக்கு ஏறி வரும் பாதையில் இப்போது
மதகுரு ஒருவர் ஏறிவருவதை கண்டான். போலீசும் அவனுடைய செக்கியூரிட்டி அதிகாரிகளும்
அலர்ட் மோடில் அவரை பார்க்க ‘தான் கீழே இருந்த கோவிலில் பணி செய்வதாகவும்
அதிகாரிகள் வந்திருப்பதை கேள்விப்பட்டு மரியாதை நிமித்தம் பார்த்து விட்டு போக
வந்ததாகவும் சொல்ல அவர்களும் லேசாய் குனிந்து மரியாத செலுத்தி அவரை உள்ளே
அனுப்பினர்.
லேசான புன் சிரிப்புடன் உள்ளே நுழைந்தவரின் கை அசைந்தது
தான் அவனுக்கு தெரியும்.. அடுத்த கணம் கையில் துப்பாக்கி தோன்றியிருக்க அது தன்னை
நோக்கியில்லை அந்த குழந்தையை நோக்கியிருப்பதை அவன் நொடியில் கண்டுகொண்டு அவளை
பட்டென்று தூக்கி வீட்டுக்குள் வீசவும் ஜனக அதற்குள் கண்டுகொண்டு அந்த மதகுரு
வேடமிட்டவன் மீது பாய்ந்து அவனை பிடிக்கவும் அந்த தள்ளுபறியில் வெடித்து விட்ட இரண்டு
குண்டுகளில் ஒன்று வருணின் மேல் பட்டது எல்லாமும்
கண நேரத்தில் நடந்து முடிந்திருந்தது.
குழந்தையின் மேலோ இல்லை அந்த வீட்டு மக்கள் மீதோ பட்டு
ஏதேனும் ஆகிருந்தால் இங்கே பெரிய கலவரம் ஆகியிருக்கும்..நல்லவேளை என்று எண்ணியது
மட்டும் தான் அவனுக்கு ஞாபகம் இருந்தது. அதன் பின் உலகமே இருண்டு போய்விட்டது.
இவன் போனால் அங்கே ஏதும் பிரச்சனை ஆகும், இவனை தாக்க யாராவது
முயற்சி செய்து பிரச்சனையில் முடியலாம் என்று பயந்தாள் தான் ஆனால் எல்லா
தடுப்புக்களையும் தாண்டி இவனுக்கே துப்பாக்கிச்சூடு படும் என்று ப்ரணவி
எதிர்பார்க்கவே இல்லை. செய்தி கேட்ட
மறுநிமிடம் தீபனின் பைக்கில் ஏறிக்கொண்டு
செய்தியில் சொன்ன தனியார் வைத்தியசாலையை நோக்கி ஓடி வந்து விட்டாள். வரும்
வழியெல்லாம் ஒரே அழுகை. அவனுக்கு என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ எதுவும் தெரியவில்லை
செய்தி சானல்களில் துப்பாக்கி சூடு பட்டது என்று சொன்னார்களே தவிர அவனின் நிலையை
பற்றி எந்த தகவலும் சொல்லவில்லை.
ஹாஸ்பிட்டல் வாசலிலேயே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மீடியாக்கள் வரிசை கட்டி நின்றன. உள்ளிருக்கும் நியாளிகளை பார்வையிட ஒருவர்
மட்டும் உள்ளே போகலாம் என்று பாஸ் வழங்கப்பட்டு அவர்களுக்கான வாசலையும் தனியே
பிரித்து விட இவள் என்ன கெஞ்சியும் அவளை அந்த வழியே உள்ளே விட மறுத்து
விட்டார்கள்.
கேட்டை அடைத்துக்கொண்டு நிற்கும் போலீசாரிடம் நான் வருணின்
வருங்கால மனைவி என்றாலும் யாரும் நம்பப்போவதில்லை. அழுகையாய் வர செய்வதறியாமல்
திகைத்து நின்றாள் ப்ரணா.
உள்ளே போக வேண்டும். அவனை பார்க்க வேண்டும் என்று மனம்
கிடந்து துடிக்க சேஷாவுக்கு போன் செய்தால் ரிங் போனதே தவிர எடுக்கவில்லை.
அப்பாவின் போனும் என்கேஜ்ட்டாக இருக்க மினிஸ்டர் பிரேம்குமாரின் மகள் என்று சொல்லிப்பார்ப்போமா
என்று எண்ணிவிட்டு அந்த எண்ணத்தை கைவிட்டாள்.
மினிஸ்டர் பிரேம் குமாரின் மகள் ஏன் வருணை பார்க்க
வேண்டும்? அனுமதிப்பார்களோ தெரியாதே..
அப்போதுதான் அப்பா என்றோ ஒருநாள் என்ன பிரச்சனை வந்தாலும்
இந்த நம்பருக்கு அழை என்று போலீஸ் கமிஷனரின் இலக்கத்தை கொடுத்து போனில் சேமிக்க
சொன்னது நினைவு வர அவருக்கு நடுங்கும் விரல்களால் போன் செய்தாள்
நல்ல வேளை அவர் ஆன்சர் செய்து விட்டார். அழுதுகொண்டே அவள்
விஷயத்தை சொல்ல ஒருநிமிஷம்மா என்று போனை கட் செய்து விட்டு காவலுக்கு நின்ற யாரையோ
தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
கதவுகள் அவளுக்காய் விரியத்திறந்தன
இப்போது அவளை சுவாரஷ்யமாய் படம் பிடிக்க ஆரம்பித்திருந்த
மீடியா காமராக்களையோ மக்களையோ அவள் கண்டு கொள்ளவே இல்லை.
அவனை பார்த்தாக வேண்டும் இப்போதே என்ற எண்ணமே அவளை
நெட்டித்தள்ள தலை தெறிக்க உள்ளே ஓடியவளை ஒரு போலீஸ்காரர் உள்ளே அழைத்துக்கொண்டு
போய் ஐ ஸீ யூவின் முன்னே அமர வைத்தார்.
சத்தம் வராமல் வாயை பொத்தி அழுதுகொண்டே யாரவது தனக்கு வந்து
தகவல் சொல்வார்கள் சென்று காத்திருந்த ப்ரணாவின் மனதில் ‘ப்ளீஸ் என்னை விட்டு
போய்விடாதே’ என்ன பிரச்சனை வந்தாலும் சரி பண்ணி கொள்ளலாம், நீ மட்டும் என் கூட இரு
போதும் எனக்கு வேறேதும் வேண்டாம் என்று ஜபம் போல வார்த்தைகள் திரும்ப திரும்ப
ஓடிக்கொண்டே இருந்தன. இறுகப்பூட்டிய ஐசீயூ கதவுகளையே பார்த்தபடி அப்படியே விழி
நீர் வடிய அங்கே உட்கார்ந்திருந்தாள் ப்ரணவி. வெளியே டாக்டர்கள் வந்து வந்து போனாலும்
அவள் யார் என்று தெரியாததால் அவளிடம் யாருமே வருணின் உடல்நிலை குறித்து
பேசத்தயாராக இல்லை.
பிரேமும் போன் செய்து அம்மாவோடு இப்போது அங்கே வந்து
விடுவதாக சொல்லி மகாவும் சேஷாவும் வந்து கொண்டே இருப்பார்கள். தைரியமாக இரு.
அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று தைரியம் சொன்னார்.
அங்கே நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு அழுதுகொண்டே
இருந்தவளை பார்த்து பாவமாக இருந்திருக்க வேண்டும். அவளை நெருங்கி வந்து மேடம்
நீங்க வருண் சாருக்கு..... என்று இழுத்தார்
நான் வருணின் வருங்கால மனைவி. மினிஸ்டர் பிரேம் குமாரின்
மகள் என்று அவள் விம்மல்களுக்கிடையே பதில் சொல்லவும் ஓஒ என்று தலையசைத்தவர் வருணுக்கு
தோளில் தான் துப்பாக்கி குண்டு பட்டதாகவும். அதிக ரத்தப்போக்கினால் அவன் மயக்கமாகி
விட்டதாகவும் மற்றபடிக்கு ஆபத்தில்லை குண்டை வெளியேற்றத்தான் தற்போதைக்கு ஆப்பரேஷன் நடப்பதாக தகவல் சொல்லி அவளை
பயப்படவேண்டியதில்லை. தைரியமாக இருக்கும் படி சொல்லி விட்டு போனார்.
அப்போது தான்
மகாவும் சேஷாவும் ஓடி வந்து சேர அவர்களுக்கும் இவளுக்கு சொன்ன அதே
விபரங்கள் பகிரப்பட்டன.
சேஷா ஆன்ட்டியின் கையை இறுகப்பிடித்துக்கொண்டு அவள் கண்ணீர்
விட்டுக்கொண்டிருக்க மற்றப்பக்கம் அமர்ந்திருந்த மகா அங்கிளை பார்க்கவே பாவமாய் இருந்தது..
நான் தான் காரணம்.. நான் தான் அன்றைக்கு சும்மா இருந்த
பிள்ளைக்கு சூடு படும் என்று வாய் விட்டேன். நான் சொன்னதால் தான் என் பிள்ளை
இப்படி கிடக்கிறான் என்று அவர் சின்னப்பிள்ளை போல அழ ஆரம்பிக்க இவளுக்கு இன்னும்
அழுகை அழுகையாய் வந்தது.
அவனுக்கு ஒண்ணும் இல்லைன்னு டாகடர்ஸ் சொல்றாங்கல்ல.
போதும்பா. நீயே அழுதா பாப்பா பாவம் அவ இன்னும் அழறா பார் என்று அவளை காட்டி சேஷா
மகாவை தேற்றிக்கொண்டிருந்தார்
எதையுமே காதிலோ கருத்திலோ எடுக்காமல் சேஷாவின் கையில்
சாய்ந்து கொண்டு அவள் அழுது கொண்டே இருந்தாள்
நான் இன்னும் அதிகமா சண்டை போட்டிருந்திருக்கணும்.
போகாதேன்னு அடம் பிடிச்சிருந்திருக்கணும்.
அவன் எங்களையெல்லாம் விட்டு தனியாக போன போதே நானும்
விலகிப்போகாமல் நேரே போய் சண்டை போட்டு இழுத்து வந்திருக்க வேண்டும். நான்
ஒன்றையுமே செய்யவில்லை
கடைசியில் இப்போதும் அவனே தான் என்னை தேடி வந்தான். நான்
ஒன்றுமே செய்யவில்லை.. அவளுக்கு அழுகை தாள முடியவில்லை.
கடைசியில் அம்மாவோடு வந்து சேர்ந்த அப்பா தான் எல்லாரையும் ஒரே அதட்டாக அதட்டி அடங்க
வைக்க வேண்டியிருந்தது.
ஒரு நான்கு மணி நேரகாத்திருப்பு.
தோளில் பாய்ந்திருந்த குண்டை வெளியே எடுத்தாயிற்று, வருண் இனி நூறு வருஷம் இருப்பான் பயப்படவேண்டாம்
என்று தகவல் சொல்லிவிட்டு ஒரு வயதான டாக்டர்
சிரித்துக்கொண்டே போக கொஞ்சம் உயிர் திரும்ப வந்தது எல்லாருக்கும். அவன் கண்முழிப்பதற்காக
எல்லோரும் காத்திருந்தனர்.
நேரே தலைக்கு மேல் பூட்டியிருந்த டிவியில் மீடியா
காமராக்கள் கழே இருந்து நடந்ததை கவர் செய்திருந்தது திரும்ப திரும்ப பிரேக்கிங்
நியூஸ் என்ற பெயரில் ஓடிகொண்டிருந்தது. செம்மண் வீதி உயர்ந்து கொண்டே போக, துப்பாக்கி
சூட்டு சத்தம் மட்டும் தான் கேட்கிறது..அலறல்களோடு..
கூடவே “நேற்று போராட்டக்காரர்களிடம் இருந்து மயிரிழையில்
தப்பித்த வருண் அவர்களை திசை திருப்ப இன்றைக்கு செந்தாரபுரவில் மக்களை சந்திக்க
போய் குண்டடி பட்டதாக செய்தி சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது.
ப்ரணாவின் உதடுகள் இகழ்ச்சி சிரிப்பில் கோடாயின. அவன் அந்த போராட்டக்காரர்களை
கண்டுகொள்ள கூட இல்லை. செயின்ட் லூயிஸில் மக்களை போய் பார்த்து விட்டு அது நன்றாக
வொர்க் அவுட் ஆனதால் தாமதமே இல்லாமல் உடனேயே அதை செந்தார புரவிலும் செய்ய
முயன்றானே தவிர இவர்கள் சொல்வதை போலவெல்லாம் அவன் போராட்டக்காரர்களுக்காய் ஸ்டன்ட்
ஒன்றும் செய்யவில்லை. அவர்களை திசை திருப்பவாம். ஆளுங்களை பார்! அவனிடம் சொன்னால்
சிரிப்பான்!
அவனுடைய உதடுகள் எப்படி ரகசிய சிரிப்பில் சுழியும் என்று
எண்ணம் மீண்டும் கண்ணீரை பொங்க வைக்க அழுதால் மகா அங்கிள் இன்னும் அழுவார் என்ற
எண்ணத்தில் பல்லைக்கடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் ப்ரணா.
எந்நேரமும் அதிரடியாய் நடந்து நெஞ்சை நிமிர்த்தி எதையாவது
செய்தபடி இல்லாவிட்டால் நண்பர் குழாமோடு ஏதேனும் குறும்பு செய்து சிரித்தபடியே
பார்த்து பழகிய அங்கிள் இப்படி குழந்தை போல அழுவதை பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது.
நீண்ட நெடிய மணிநேரங்கள் கழிய வருண் கண் விழித்து விட்டான்
என்ற செய்தியை ஒரு நர்ஸ் வந்து சொல்லிப்போக அவசர அவசரமாய் உள்ளே போனவர்களை மூக்கில்
ஆக்சிஜன் மாஸ்க், கையில் செலைன், தோளில் பெரிய கட்டோடு தன்னுடைய ட்ரேட் மார்க்
புன்னகையோடு வரவேற்றவனை பார்க்க சிரிப்பும் அழுகையும் பொங்க கன்னத்தில் ஒரு அறை
விடலாம் போல கோபமாய் வந்தது. சேஷா ஆன்ட்டி அவனை முத்தமிட்டு வலிக்குதா என்றெல்லாம்
கேட்கும் வரை மறுபக்கம் தள்ளி நின்றவளின் கையை அவன் கரம் ஒன்று எப்படியோ தேடி
தனக்குள் பொதிந்து கொண்டது.
“உனக்கு இது சரிப்படாதடா.. இந்த மேயர் போஸ்டிங் மட்டும்
முடியட்டும். இதுக்கு பிறகு உனக்கு அரசியல் பண்ற எண்ணமே வரக்கூடாது! உன்னை பார்சல்
கட்டி அனுப்பி விடப்போறேன். இனிமே என்னை மீறி கட்சி வேலை பார்க்கிறேன்னு போ உன்
காலை உடைச்சு போடறேன்.” உடைந்த குரலோடு அவனை மகா மிரட்ட
“இது நானூற்று மூணாம் தடவை. நீங்க என் காலை உடைக்கிறது” என்று அவன் சிரித்தான்.
“சொந்தமா மூச்சு விடவே முடியலையாம். நக்கல் மட்டும் குறையல
பார் இவனுக்கு” என்று மகா கவலையை விட்டு விட்டு பொரும ஆரம்பித்து விட்டார்.
இந்த பக்கம் திரும்பியவன் “பயந்துட்டியா? என்று அவளின்
கைகளை பிடித்து தனக்குள் வைத்துக்கொள்ள அவளுக்கு மீண்டும் அழுகை பொங்கி வந்தது
“லூசு.. அழாதேடி. உனக்கு ஒரு வேலை கண்டுபிடிச்சு கொண்டு
வந்திருக்கேன். அப்புறம் சொல்றேன்” என்று அவன் கண்சிமிட்ட மெலிதாய் சிரிததாள் ப்ரணவி
“பேசாதிங்க ..இன்னிக்கு ஒரு நாளாவது ரெஸ்ட் எடுங்க, நிறைய
ப்ளட் போயிருக்கு” அவள் மெல்ல அவனின் கையில் தட்டியவளிடம்
“எங்கடி வாங்கின அந்த ரெயின்கோட்? “ என்று ரகசியக்குரலில்
பதிலுக்கு அவன் கேட்க
வெட்கமாகி அவள் அவனை கிள்ளி வைக்க ஐயோ சேலைன் என்று வாய்க்குள் அவன் கத்தவும்
பயந்து விலகியவள் அவன் விளையாடுகிறான்
என்று புரிய முறைத்தாள்
“பேசக்கூடாது. ரெஸ்ட் எடுக்கனும்னு டாகடர் சொன்னாங்க வருண்”
“இந்த செலைன் டியூபை கொஞ்சம் கழட்டி விடேன்..இரிடேட்டிங்கா
இருக்கு” என்று அவன் பதில் கோரிக்கை வைக்கவும் கடுப்பாகி முறைத்தாள்
ஆபரேஷன் பண்ணி குண்டை வெளியே எடுத்திருக்காங்க. உடம்பு
பெரிய ஷாக்குக்குள்ளே போய் வந்திருக்கும். பேசாம படுத்திருங்க..அவள் மெலிதாய்
அதட்டியதற்கு லேசாய் சிரித்தவன் அப்படியே மருந்துகளின்
அசதியோ என்னமோ தூங்கி போய்விட்டான்.
பாவமாய் வந்தது. இப்போது வலிக்காவிட்டாலும் விறைப்பு
எடுபடும் போது வலிக்கும் தானே..
கொஞ்ச நேரம் அவன் பக்கத்திலேயே இருந்தவளை அம்மா வந்து
கூட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். “அவங்க நைட் கூட இருப்பாங்கடா. நம்ம போயிட்டு நாளைக்கு
காலைல வரலாம்..நாளைக்கு ரூமுக்கு மாத்துவாங்களாம்”
மீண்டும் ஒரு தடவை அவனுடைய ரூமை எட்டிபார்த்தவள் தூங்குபவனை
பார்த்துவிட்டு மகா சேஷாவிடம் சொல்லிக்கொண்டு
அம்மாவுடன் நகர்ந்தாள்
பப்பிம்மா நீ வேணும்னா முன்னாடி போ நாங்க ரெண்டுபேரும் பின்னாடி வரோம்.
மீடியா இருப்பாங்க.. போட்டோக்கள் வீடியோக்கள் வரும்” அப்பாவின் தயங்கி தயங்கி வந்த
குரல் அவளை வாள் கொண்டு அறுத்தால் போலிருந்தது
அவளுடைய நடத்தைகள் தங்கள் இருவருடன் சேர்ந்து காணப்படவே அவள்
விரும்பவில்லை என்று என்னும் அளவுக்கா இருந்தது?கடவுளே அவரின் கையை இறுகப்பிடித்துக்கொண்டவள்
அவரோடு கூட ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தாள்
நீங்கள் தவறுகள் செய்தால் எதிர்த்து போராடுவேன்தான் ஆனால் என்னுடைய
அப்பா அம்மா என்று காண்பிக்க என்றைக்கும் நான் கூச்சப்பட்டது இல்லைப்பா.
பிளாஷ்கள் மின்னி மின்னி வந்ததும் வருணுக்கு இப்போது உடல்
நிலை எப்படி இருக்கிறது சார் என்றும் கேள்விகள் வர பிரேம் மைக்கை வங்கி வருணின்
உடல்நிலை இப்போது பரவாயில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு இருவரையும்
அழைத்துக்கொண்டு காரை நோக்கி போனார்.
sis why this kolaveri. Semma kandaiten Unga mela. epdi varunku adipadalam. Pavamla. en heroku ivlo kastama? ingayum varunku edhum twist Vachurukingla enna? painting visayam super sis. same ingayum. matham rombave crucial topic sis. engayume. alaga handle pannitinga andha wordings super.
ReplyDeleteAvan okay nu than sollitten la 😁 thank youuuu
DeleteSemma
ReplyDeleteThanks Bhuvi
Deleteஅடேய் ! சின்ன பாப்பாகிட்ட கூட நக்கல் நிக்கல மேன் உனக்கு.
ReplyDeleteபுல்லட்-ஐயும் அசால்டாக தான் டீல் பண்றான். ப்ரணாகிட்ட இதை எதிர்பார்த்தேன் !
waiting for the next update sis !
🤣 that papa was not that good in drawing avan pavam enna pannuvan 😁😁😁
DeleteNamma magana oviyam intha range laiya iruku sappa dei mudiyala.
ReplyDeleteKalavaram, group mechanism , mob mentality everything is on point. Enna athe mathiri sharp ah gun shot vera. The dynamics between maha and sesha is awesome. Prana thought process both about varun and her relationship with family ellame innum deep ah poguthu let's see how she is going to channelize it
Thanks Mano 😍
DeleteWow awesome
ReplyDeleteThank yoi
DeleteAda ponga neenga!!! Aanalum..seekiram vaanga neenga !!!
ReplyDelete