Saturday, March 25, 2023

அகம் -14

 ரூஹி அன்றிரவு ஒரு மணிநேரம் கூட தூங்கியிருப்பாளோ தெரியாது. கட்டிலில் குப்புறப்படுத்திருந்தவளின் முன்னே லாப்டாப் திறந்திருந்தது. முழுத்திரையிலும்  ஒன்றொன்றாய் மாறிக்கொண்டிருந்த படங்களில் இப்போது மேகாலயத்தின் ஹோட்டல் யன்னலில் இருந்து கீழே நின்று கொண்டிருந்தவனை இவள் எடுத்திருந்த புகைப்படம் விரிந்திருந்தது.

திரையை பார்ப்பதையும் தலையணையில் கண்ணீர் முகத்தை தேய்ப்பதையும் மாறி மாறி செய்துகொண்டிருந்தவளின் எண்ணங்கள் எங்கெங்கோ பயணித்துக்கொண்டிருந்தன.

இதற்குத்தானே இந்த காதலே வேண்டாம் என்று இரும்புத்திரை கொண்டு இதயத்தை மூடி வைத்திருந்தேன். இவனுக்கு முன்னே யாருமே அவளை அணுகவில்லையா என்ன? நேராக கூட கேட்டிருக்கிறார்கள். அவளுக்குத்தான் பயம்.. மீளவே முடியாத நரக வேதனையில் கொண்டு போய் காதல்  நிறுத்தி விட்டு போய்விடும் என்ற பயம். தள்ளியே தான் இருப்பாள்.

அந்தளவு ரிஸ்க் எடுக்கக்கூடியவனை நான் இன்னும் காணவில்லை என்று சிரித்துக்கடப்பவளுக்கு  காதல் அப்படியெல்லாம் திட்டமிட்டு வருவதில்லை என்று நிரூபித்து விட்டிருந்தது காலம்.

இவன் வந்தான் அவளுக்கு யோசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் புயலாய் சுருட்டி இதயத்தை பறித்துக்கொண்டு போயே விட்டான்.

மறுபடியும் எல்லாம் ஆரம்பித்த இடத்திலேயே என்னை கொண்டு வந்து விட்டிருக்கிறாயடா. ஆரம்பித்த போது இருந்த அதே என்னை  உன்னால் திரும்பத்தர முடியுமா?

எவ்வளவு இலகுவாய் சவாலில் தோற்றுவிட்டேன் என்று விட்டுப்போய்விட்டாய்!

நானா உன்னை என் வாழ்க்கைக்குள் கூப்பிட்டேன்? நீயே தானே என் பலவீன சுவர்களை அடித்துடைத்து உள் நுழைந்தாய். பிறகு வேண்டாமென்று போய்விட்டாய், நானென்ன விளையாடும் பொம்மையா உனக்கு?

சவாலில் தோற்று விட்டானாமே..

நான் உனக்கு வெறும் சவால் தானா? அழுகையாய் வந்தது.

அடுத்த கணமே..இல்லை இல்லை என்று மனம் அடித்துச் சொன்னது,  அவனும் அழுதானே. முகத்தை துடைப்பதாய் பைக்கை நிறுத்தி கண்ணை துடைத்துக்கொண்டவனை தேற்றவும் வழியில்லாமல் கைகளை பொத்திக்கொண்டு நான் பின்னே தானே அமர்ந்திருந்தேன்.

ஆனாலும் அவன் என்னை விட்டுப்போனது விட்டுப்போனது தானே.. 

நான் உன் பாதையில் குறுக்கிடாத போது வாழ்ந்தது போலவே நீ வாழ்ந்து கொள்ளலாம் என்று பெரிய மனதாய் அனுமதி வேறு கொடுத்து விட்டுப்போனான்.

பெருத்த விம்மல் ஒன்று வர திரையில் மாறிய படங்களில் மேகாலயத்தின் மணல் பாதையில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது  அவளைப்பார்த்து சிரிப்பதாகப்பட்டது.

புகைப்படத்தில் இதுவரைக்கும் பார்த்திராத தன்னுடைய மலர்வும் தன் கண்ணின் சிரிப்பும் கருத்தில் பட கண்ணீர் இன்னும் கூடியது. எவ்வளவு குறுகிய கால சந்தோஷம் இது!

எப்போதும் உள்ளுணர்வு கூறுவது சரியாகத்தான் இருக்கும். ஏதோ நடக்கப்போகிறது என்று நினைத்தேன். இப்படி இவ்வளவு நாளும் தனியாகவே வாழ்ந்ததில்லை என்பது போல அடுத்தது என்னவென்று தேடி கலங்கி நிற்பேனென்று நினைக்கவில்லையே.

லாப்டாப் திரையில் அடுத்த புகைப்படம் மாறியது. சந்தையில் கிழங்குகளை விற்றுக்கொண்டிருந்த மனிதரின் அருகில் கல்லில் உட்கார்ந்து என்னமோ பேசிக்கொண்டிருந்த யுதியின் புகைப்படம் இப்போது அவளையே பார்க்க கண்ணீர் நின்று போக அவனையே வெறித்தாள் அவள்.

பாவனைகள் இன்றிய புதுக்காற்று அவன். உலகத்தின் கட்டுத்தளைகளை பற்றி அவனுக்கு அக்கறை கிடையாது. பிடித்ததை செய்ய உனக்கு ஆர்வம் இருந்தால் போதும் என்று கற்றுத்தந்த அவளின் குரு. சிரிப்பையும் குறும்பையும் தவிர வேறெதையும் அவன் எனக்கு காட்டியதில்லை . நான் தான் பாவம் அவனை அழும் அளவுக்கு கொண்டு வந்து விட்டேன்.

அவளுக்கு ஏதும் புரியவில்லை.

அவள் எழுதும் பிரிவை சேர்ந்தவர்களை எழுத்தாளர்கள் என்று யுதியின் பக்கம் இருப்பவர்கள் மதிப்பதில்லை. ஆனால் அதிகப்பட்சம் பின்னால் கிண்டல் செய்வார்களே தவிர இப்படி முகத்திற்கு நேரே கேவலப்படுத்தவோ கூட்டத்துக்கு வந்தவர்களை அவமானப்படுத்தும் அளவுக்கு போக மாட்டார்கள். அதை நம்பித்தான் அவள் மாட்டேன் மாட்டேன் என்றாலும் இறுதியில் சம்மதம் சொன்னதே, ஆனால் அங்கே நடந்தது நேரடி வன்மத்தாக்குதல். இதற்கு அவளுடைய அடையாளம் மட்டும் காரணமாயிருக்க முடியாது என்று அங்கேயே நிச்சயமாகி விட்டது.

அவளை அழைத்துப்போனதால் தான் செவ்வேலுக்கும் அவனது குழுமத்துக்கும் யுதியோடு ஏதோ பெரிய பிரச்சனையாகி விட்டது என்றும் புரிந்தது. இவள் கண்பார்க்கவே ஒருவரோடு யுதி சண்டை போட்டான். அந்த பெண்களின் முன் அவள் உடைந்து நின்றதை ஒரு நொடியில் புரிந்து கொண்டு அவளை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவன் சமூக வலைத்தளங்களை விட்டும் போய்விட்டான். அவனை பின் தொடர ஆரம்பித்த அத்தனை காலத்தில் ஒரு தடவை கூட இதை அவள் அறிந்திருக்கவில்லை. ஒருதடவை முகப்புத்தகமே அவனை மூன்று நாட்களுக்கு முடக்கி விட்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தை தவிர அவனாக பின்வாங்கி அவள் அறிந்ததில்லை.

அதை விட செவ்வேல்? அந்த மனிதர் என்றால் அவனுக்கு பிடிக்கும், அவரை பற்றி ரசனையாய் பேசுவான். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறான் என்று அவனுடைய பேச்சுக்களில் தெரியும். இருவருக்கும் குரு சிஷ்யன் என்ற தொடர்பு தாண்டி ஆழ்ந்த பிணைப்பு இருப்பது எல்லாருக்குமே தெரியும். அவன் அவளை கூட்டிக்கொண்டு விழாவுக்கு போனது அவ்வளவு பெரிய தவறா? அவள் என்ன அப்படி ஒரு தீண்டத்தகாத பெண்ணா? அவர் ஏன் யுதியோடு கோபித்தார்?

இரவு வரை அவன் விட்டு விட்டு போன அதிர்ச்சியில் எல்லாம் மறந்து அழுதுகொண்டே இருந்தவள் சாமத்தில் தான் அவளை அவ்வளவு வன்மத்தோடு எல்லாரும் தாக்கியதன் காரணத்தை அறிய முகப்புத்தகத்தில் தேடலானாள்.

யுதிக்கு வந்த அந்த சர்வதேச அழைப்பின் போதே  அவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பமாகி விட்டது. மேகாலயத்தில் வைத்தே நாம் சந்தேகப்பட்டோமே.. ஆனால் இந்த பிரச்சனையில் அவள் எங்கே வந்தாள் என்பது தான் அவளுக்குள் இருந்த பெரிய கேள்வி.

முதலில் கிடைத்த பதிவுகள் விழாவில் இருந்து பாதியில் யுதி வெளியேறியதை அவனது குழுமத்தில் யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்பதை சுட்டின. அதை இவ்வளவு நாளும் குழுமத்தின் தூணாய் நின்றவன் நிரந்தரமாய் வெளியேறி விட்டதாயே அவர்களின் பதிவுகள் மொழிபெயர்த்தன. இவ்வளவு நாளும் அவனுடைய பதிவுகளுக்கு கீழே கருத்துக்களிடுவதில்  பரிச்சயமான நபர்கள் எல்லாம் துரோகி என்று அவனை சாடி பதிவிட்டுக்கொண்டிருந்ததை அவள் கண்டாள். என்னால் தானே இது நடந்தது. குற்ற உணர்வு தாக்க பதிவுகளை நூல்பிடித்துப்போனவளுக்கு

அவளை மறைமுகமாய் தாக்கி இருந்த பதிவுகளை காணக்கிடைக்க  வெலவெலத்துப்போனாள்.

அதாவது யுதிஷ்டிராவுக்கும் செவ்வேலுக்கும் இடையிலான சண்டைக்கு காரணம் அவளாம். அவள் தான் குழுமத்து உறுப்பினர்களுக்கெதிராய் தோன்றித்தனமாய்  அவனை செயற்பட மறைமுகமாய் தூண்டுகிறாளாம். நன்றாக இருந்த குழுமத்தை உடைத்தே போட்டு விட்டாளாம்.

நானா? ரூஹியா?

எதிர்மறைக்கருத்து கூட்டத்தில் இவள் மட்டும் சொல்லவில்லை. வேறும் ஓரிருவர் சொன்னார்கள். ஆனால் இவள் பேசியதை மட்டும் நேரேயும் வந்து அவரை அவமானப்படுத்தவென்றே கேள்விகள் கேட்டாள் என்று எடுக்கப்பட்டு ஆவேசமாய் அவளின் வில்லி அவதாரத்துக்கு அரிதாரம் பூசிக்கொண்டிருந்தார்கள்.

கடைசியில் ஒரே ஒரு பதிவு சித்தார்த் பிரச்சனையை மறைமுகமாய் சுட்டி யுதி வேண்டுமென்றே குழுவில் சமீப காலமாய் தன்னுடைய ஆதிக்கத்தை நாட்டி வருவதாகவும் அதற்கு ரூஹி தான் சாவி, அவள் தான் தருணியின் பிரச்சனையில் அவளை தலையிட வைத்தாள் என்றும்   தருணியின் எழுத்துக்கள் அவ்வளவு மோசம் என்றும் அதற்கு துணை போன எழுத்தாளினி எப்படி வேறு இருப்பாள் என்றும் கிண்டலாக சொல்ல இது தான் ஆதி மூலமா என்று அவள் ஏங்கி விட்டாள்.

யுதிக்கு எப்படி தருணியின் தொடர்பு வந்தது என்ற கேள்விக்கு பதிலாக இவள் கைகாட்டப்பட்டிருக்கலாம், அதற்கு? நானே அவனையும் உங்களையும் பிரித்தேன் என்பீர்களா? எனக்கு என்ன காரணம் இருக்கிறது அப்படி பிரித்து வைக்க?

செவ்வேலின் பதிவு வேறு ஒரே உருக்கமாயிருந்தது. யுதி விலகி விட்டான், மகனென்று நம்பியிருந்தேன். இப்படி அவன் என் மனதை உடைப்பான் என்று நினைக்கவில்லை. என்னை யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம் தனிமை வேண்டும் என்று மனம் கலங்கிப் பதிவிட்டிருந்தார். உண்மை வருத்தமே அவரது பதிவில் தொனித்தது. தமிழின் இலக்கியப் பிதாமகர் இல்லையா? அத்தனை பேர் அவருடைய மன வருத்தத்தை கண்டு கோபாவேசமாய் இவனை திட்டியிருந்தனர். பாவம் அபியும் இன்னும் ஓரிருவரும் தான் தனியாக நின்று இவனுக்காய் களமாடிக்கொண்டிருந்தனர்.

எல்லாவற்றையும் படித்து முடிக்க அவளுக்கு தலை தான் சுற்றியது. தமிழின் எழுத்துலக பிதாமகருக்கும் அவரது ஆஸ்தான சிஷ்யனுக்கும் இடையில் சண்டை மூட்டி விட அவள் யார், எங்கோ ஓர் ஓரமாய் கல்லூரி சென்று வரும் எழுத்தாளினி.

இப்போது அவர்கள் அவளிடம்  நடந்து கொண்டதற்கு காரணம் புரிந்தது. குழுவை பிரித்த வில்லி என்று நினைத்துக்கொண்டால் அடிக்கத்தானே செய்வார்கள்! ஏனய்யா இத்தனை வருஷமாக யுதியோடு பழகுகிறோம் என்று பதிவுகளில் சொல்கிறீர்களே..அவன் யார் சொல்லையும் கேட்கவே மாட்டான் என்று உங்களுக்கு தெரிந்திராதா?

அவனைப்போய் துரோகி என்கிறீர்களே? என்னிடம் கூட குழுவைப்பற்றியோ செவ்வேல் பற்றியோ அவன் ஒருவார்த்தை தவறாக பேசியதில்லை. ஏன் அவன் தன் பிரச்சனையை பற்றியே பெசமாட்டானே.

பதிவுகளை படிக்கும் போது புரிந்ததே.. எல்லாருக்கும் அவன் மேல் அவ்வளவு ஆதங்கமும் வருத்தமும். நேசமும் அன்பும் இல்லாத இடத்தில் எப்படி வருத்தம் கொள்ள முடியும். அது இருபக்கமும் இருந்திருக்கும் தானே.

மேகாலயத்தில் அன்றைக்கு விடிகாலை, பக்கத்து அறைக்கதவு திறக்கும் சத்தம் கூட கேட்காமல் தன்னுலகத்துக்குள் மூழ்கிக்கிடந்தவனின் தோற்றம் மீண்டும் மனக்கண்ணில்  வந்தது. எழுத்து அவனுக்கு உயிர் மூச்சு.. அவனது தேடல்கள், துரத்துதல்கள் எல்லாமே அதற்கான ஓட்டங்களே.. அந்த குழுமம் அவனது உலகம். இப்படி தனிமைப்பட்டுப்போனானே.

ப்ச் நாம் தான் அவனை ஒரே மாதத்தில் பத்து வருடங்களாக இயங்கிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து பிரித்து தனியாய் நிறுத்தி விட்டோமா? அவளுக்குள் குற்ற உணர்வு ஏகமாய் குடிகொண்டது.

என்னதான் அவள் சொல்வது புரியாமல் அவளை கூட்டத்துக்கு இழுத்து சென்று விட்டாலும் அங்கே அவளை அவன் ஒரு இடத்தில் கூட விட்டுத்தரவில்லை. அவளுக்காய் எல்லாரிடமும் எதிர்த்து நின்று விட்டு வெளியே வந்தவனுக்கு அவர்களையும் விட்டுத்தர முடியவில்லை போலும். எப்படி முடியும்? பத்து வருடங்களுக்கு மேல் இறுகி வளர்ந்த உறவுகளாயிற்றே? அதுதான் உப்புப்பெறாத அந்த சவாலை காரணம் காட்டி அவளைப்பிரிந்து சென்று விட்டான். அவள் அப்படித்தான் புரிந்து கொண்டாள்

என்ன காரணத்தாலோ என்னால் உங்களுக்குள்ளே பிரச்சனை ஆகியிருக்கிறது. என்னால் அந்த பழைய உன்னை, உன் சுற்றத்தை நட்புகளை மீளத்தர முடியாது. ஆனால் உனக்கு இன்னும் பிரச்சனை தராமல் விலகி இருக்க முடியும்.

உன் மேல் காதல் என்று புரிய முன்னரே உன் நலம் நாடியவள் நீ என் உயிரில் கலந்தவன் என்று தெரிந்த பிறகும் உன்னை வருத்த முயல்வேனா?

சாதாரணள் நான், நீ அசாதாரணன். என்னைப்போல உனக்கு சாதிக்க உலகின் சான்றிதழ்கள் தேவைப்படவே இல்லை. வெறும் பேனாவைக்கொண்டே அழிக்க முடியா அடையாளத்தை உருவாக்கிக்கொண்டாய். நானோ அடையாளங்களுக்குள் ஓளித்துக்கொண்டு விளையாடுபவள்  நமக்கிடையில் எப்படி நட்பு மலரக்கூடும் என்று நான் முதல் நாளே யோசித்திருந்திருக்க வேண்டும்.  ப்ச்.. உன்னோடு பழகும் எவருக்கும் அந்த வேறுபாடுகளை புரிய நீ தான் அனுமதிப்பதில்லையே..

அதற்குமேல் படுத்திருக்க முடியாமல் அதிகாலையே குளித்து அருகில் இருக்கும் கோவிலில் போய் அரைமணி நேரம் சும்மா பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தவள் நேரத்தோடேயே பல்கலைக்கழகத்துக்கு போய் விட்டாள்.

காலை தொடர்ந்து இரண்டு விரிவுரைகள் இருக்க நேரம் போனதே தெரியவில்லை.. எப்போதும் பகல் முடிந்து மாலையாகாதா என்று ஏங்கும் மனம் அன்றைக்கு இந்த பகல்களும் விரிவுரைகளும் முடியாமல் ஆயுளுக்கும் தொடராதா என்று எங்க ஆரம்பித்தது. இதோ விரிவுரை மண்டபத்தை விட்டு வெளியேறியதுமே அவளுடைய இந்த அவதாரம் முடிந்து போகுமே.. வெளியே உள்ள உலகம் முகம் பார்க்கும் கண்ணாடிகளை போல.. ஒவ்வொரு கண்ணாடியிலும் தெறிக்கப்போகும் அவளது விம்பங்களை எதிர்கொள்ளும் திராணி அவளிடம் சத்தியமாய் இல்லை..

எப்போதுமே நத்தைக்கூட்டை முதுகில் கொண்டு திரிபவள் திடும்மென அது பிடுங்கப்பட்டு போனதில் அதன் வலியைக்கூட நின்று உணர அவகாசம் இன்றி உலகை எதிர்கொள்ளும் கட்டாயத்தில் தள்ளிவிடப்பட்டது போலிருந்தது.

காலம் அவளுக்காய் நிற்குமா? எப்படியும் வெளியே வரத்தானே வேண்டும். மெல்ல மெல்ல ஹாரிடோரில் நடந்து கொண்டிருந்தவள் தூரமாய் மரத்துக்கு கீழே இருந்த பெஞ்சில் இருந்து விட்டு அவளைக்கண்டதும் ஓட்டமாய் ஓடி வந்த தருணியை எதிர்பார்க்கவில்லை.

ஐயோ..இவள் நடந்ததை எப்படி கிரகித்துகொண்டிருக்கிறாளோ தெரியவில்லையே.. அவசரமாய் அவள் தருணியை நெருங்க

“அக்கா என்னால தானா எல்லாம்? யுதி அண்ணா ஆன்லைனிலேயே இல்லையே.. அவங்களுக்குள்ள எல்லாரும் சண்டை போட்டுக்கிறாங்கக்கா..என் பிரச்சனையை வேற இழுத்து பேசிக்கிட்டாங்க. பயத்துல நான் என் அக்கவுன்டை க்ளோஸ் பண்ணிட்டேன்.  நீங்க ஒகேவா இருக்கீங்களா?” அவள் உதடு துடிக்க கேட்டாள்.

இவளுக்கும் கண் கலங்கப்பார்த்தது. ஷ் நீ பெரியவள் என்று தனக்கு தானே ஞாபகப்படுத்திக்கொண்டவள் அவளை அருகில் இருந்த பரிஸ்டாவுக்கு அழைத்துப்போய் காபி வாங்கிக்கொடுத்தாள்.

“இங்கே பார். நம்மல்லாம் பெரியவங்க. நீ எங்களை கூப்பிடலை. நாங்க தான் உன்னை தேடி வந்து தலையிட்டோம். ஒரு விஷயத்தை செய்தால் விளைவுகளை பொறுப்பேற்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எல்லோருக்கும் இருக்கிறது. நீ தேவையில்லாமல் இதையெல்லாம் உன் தலையில் போட்டுக்காத சரியா.. சண்டைகள் எந்த உறவிலும் வருவது தான். கொஞ்ச நாள் விலகி இருந்தால் சரியாகி விடும், நீ படிக்கும் வேலையை மட்டும் பார்” என்று சிரித்தவளுக்கு இதை நமக்கு யாராவது சொல்லி நம்ப வைக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வர மீண்டும் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ளும் போலிருந்தது.

எதிரில் தவிப்புடன் இருந்த சின்னவளுக்காய் தன்னை அடக்கிக்கொண்டவள் உனக்கு இப்போது யாரும் தொல்லை கொடுக்கிறார்களா? என்று கேட்டு அவள் இல்லையென உறுதிப்படுத்தவும் எதுவாக இருந்தாலும் உடனே சமீர் அண்ணாவுக்கு சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி விட்டு விடை பெற்று வந்தவள் தன்னுடைய அறைக்கு வந்தபோது மொத்தமாய் தளர்ந்திருந்தாள்

இவள் பதிவுகளை பார்த்து புரிந்து கொண்டிருக்கிறாள் என்றால் என் பக்கத்தில் எத்தனை பேர் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்களோ..

அடுத்த விரிவுரை மூன்று மணிக்குத்தான். லைப்ரரிக்கு கூட போகாமல் மேசையில் தலையை கவிழ்ந்து உட்கார்ந்திருந்து விட்டாள் ரூஹி .

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். கதவு கொஞ்சம் வேகமாய் தட்டப்பட உள்ளே வர சொல்ல கதவை தள்ளி திறந்து கொண்டு வந்த விரிவுரையாளரை அவள் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.

இவரை பார்த்திருக்கிறாள். முதிர்ந்த விரிவுரையாளர் திரு கந்தசாமி, அவர்களுடைய பீடத்தை சேர்ந்தவரில்லை ஆதலால் பெரிய பரிச்சயம் கிடையாது.

ஏன் அவளை சந்திக்க முன்னனுமதி கூட கேட்காமல் நேரே வந்திருக்கிறார் என்று பதட்டத்தை மனதுக்குள் மறைத்த படி “ஹலோ சார்..” என்று புன்னகையோடு வரவேற்க முயன்றவளை அவரின் கடுமையான முகபாவம் தான் எதிர்கொண்டது, அவர் உட்காரும் மனநிலையில் இல்லை என்று புரிய படபடத்த மனதோடு தானும் எழுந்து நின்றாள் ரூஹி.

“உன் மனசில் நீ என்ன தான் நினைத்திருக்கிறாய்?” அவர் உறுமவும் அவள் விழித்தாள்

“உங்கள் வயசுக்கு தக்க போல நடந்து கொள்ள வேண்டும். நீ எல்லாம் விரிவுரையாளர் என்று சொல்லிகொள்கிறாய் வெட்கமாய் இல்லை? எங்கே வந்து யாரிடம் கைவைக்கிறீர்கள். தொலைத்து விடுவேன்” அவரின் கோபத்தில் அதிர்ந்து போனவள்

சார்..” என்று இடைமறித்தாள் ரூஹி. அவள் ஜூனியர் தான் என்றாலும் பேசுவதற்கு ஒரு முறை இல்லையா?

அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை

“அந்த மனுஷன் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அவர் திறமை தெரியுமா? அவருடைய எழுத்துக்களை புரிந்து கொள்ளத்தான் உங்களுக்கு முடியுமா? தமிழின் பெருமை அவர். அந்த மனுஷனைப்போய் கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறீர்கள்? உருத்தெரியாமல் அழித்து விடுவோம் தெரிந்து கொள்ளுங்கள்!” அவர் விரல் நீட்டி மிரட்ட

“சார் நீங்க ஏதுவாக இருந்தாலும் நேரே பேசலாம். இப்படி எனக்கு புரியாமல் மிரட்டுவது நன்றாக இல்லை” என்று கொஞ்சம் கோபமாக சொல்ல

“இங்க பாரும்மா. எங்கள் கல்லூரி பெண் என்பதால் பொறுமையாய் பேசுகிறேன்.உங்களுக்கு இருக்க முடியாமல் சிண்டு முடித்து சண்டை போட வைக்க  அவரும் நாங்களுமா கிடைத்தோம். எல்லாரும் ஒவ்வொரு பக்கத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கிப்போய் கிடக்கிறார்கள். அவனை சின்னவன் என்று பார்க்கவில்லை, முகவரி கூட பார்க்கவில்லை..தலையில் தூக்கி வைத்தோம். மகன் என்று அந்த மனுஷன் கொஞ்சினார், வேலையை காட்டி விட்டீர்களில்லை? அங்கே கூட்டத்துக்கு வேறு  போனாயாமே.. செய்த வேலைகள் எல்லாம் போதாதா?” அவர் ஆவேசமாய் கேட்க

“சார் இது எனக்கு சம்பந்தமே இல்லாத பிரச்சனை..என்னிடம் ஏன் சொல்றீங்க?” அவளும் கோபமாய் கேட்டாள்

“இங்க பார், நீயும் அவனும்  என்ன வேணுமென்றாலும் செய்து கொள்ளுங்கள், எங்களுக்கு அக்கறையில்லை..என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் அவன் இனிமேல் செவ்வேல் பக்கம் வந்தான், உருத்தெரியாமல் ஆக்கிடுவோம்! என்ன நினைச்சிட்டிருக்கான் அவன்? நாங்கள் மனது வைக்காவிட்டால்  ஒரு எழுத்து கூட பதிப்பில் வராது. அப்படியே வந்தாலும் எங்கேயும் மேலே போகாது. இதுக்கு மேல அவன் அந்த மனுஷனை சீண்டுறது ஏதாவது இருந்துது.. தொலைச்சுடுவோம். உங்க வயசு என்னமோ அதுக்கேத்த இடத்துல இருந்துக்கோங்க”

“சார். இதெல்லாம் யுதிஷ்டிரா கிட்ட சொல்ல வேண்டிய விஷயம். என்கிட்டே ஏன் சொல்றீங்க? வாசகர் கூட்டத்துக்கு உங்க கூட்டத்தில் இல்லாத ஒருவர் வர்றது அவ்வளவு தப்பா.. எப்பேர்ப்பட்ட இலக்கிய உலகம் உங்களோடது!” அவளுக்கு செம கோபம். அவளுடைய இடத்துக்கு வந்து இப்படி பேச இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது

“வாசகர் கூடத்துக்கு வாசகன் யார் வேணும்னாலும் வரலாம். அழகான குழுமத்தை கலைச்சு குழப்பம் பண்ணிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி அவர் முன்னாடி வந்து நின்னா பார்த்துட்டு சும்மா நிப்பாங்களா எல்லாரும்? எல்லாரும் பயங்கர கோபத்தில் இருக்காங்க. நான் தான் நீ என்னுடைய கல்லூரி தான், நானே பேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்” என்றவர் அவளை முறைத்து விட்டு “நீ என்ன பண்றியோ அதெல்லாம் எனக்கு அக்கறை இல்லை.. இன்னொரு தடவை எங்களை சீண்டினால் ...” என்று எச்சரிக்கையாக நிறுத்தி விட்டு போய்விட்டார்.

அப்படியே வாசலையே பார்த்திருந்தாள் அவள் . அவர் மறைமுகமாக சொன்னது புரியாமல் இல்லை. பல்கலைக்கழகத்தில் உனக்கு பிரச்சனை வரும் என்று சொல்லிவிட்டு போகிறார். அத்தோடு இது முழுக்க முழுக்க  யுதிஷ்டிராவுக்கான எச்சரிக்கை செய்திதான். அவனுக்கான செய்தியை அவள் மூலமாக அனுப்ப முயல்கிறார்கள்.

யுதியிடம் தருணி விஷயத்தை சொன்னது தவறு என்று அவள் நினைக்கவே இல்லை. தருணி ஒரு கல்லூரி மாணவி அவளுக்கு துன்புறுத்தல் நடக்கிறதென்றால் யார் வேண்டுமானாலும் யுதி செய்ததை செய்யத்தான் நினைப்பார்கள். அதை கூட புரிந்து கொள்ள மாட்டார்களா? இவர் எவ்வளவு பெரிய ப்ரோபெசர்? இவர் கூட அவள் மாணவி என்று நினைக்க மாட்டாரா? அவள் புறம் தான் தவறு இருப்பதாக நினைத்துக்கொண்டு விட்டார்களா?  இப்படி கட்டைபஞ்சாயத்து ரவுடி போல யுதியை  எழுத்துலகில் இருக்க விடாமல் பண்ணிவிடுவோம் என்று நேரடியாக வந்து மிரட்டிவிட்டு போகிறார். முடிந்தால் அவனிடம் சொல்லிப்பார்க்க வேண்டியது தானே?. என்னிடம் ஏன் வருகிறார்கள்? எலும்பை எண்ணி கையில் கொடுத்து விடுவான் என்று பயம்!

ஆனால் அவளை மிரட்டியது அதில் இருந்த உண்மை. இந்த பெரிய தலைகளை வம்பிழுத்தால் புத்தகங்கள் வெளியே வரலாம்..விற்கவும் செய்யலாம். அத்தோடு நிற்கும். மேலே எங்கேயும் போகாது கவனம் பெறாது. என்னதான் விருது வாங்கியிருந்தாலும் எழுத்துலகில் அவன் குழந்தையே தான். அவனை அழிக்க இவர்களுக்கு முடியும்.

ஒருவேளை அவள் அவனுக்கு அறிமுகமாகியிராவிட்டால் தருணி விஷயம் தெரியவராத ஒரு உலகத்தில் அவன் இருந்திருப்பானோ..இதெல்லாம் நடந்திராதோ?

நேற்று முழுக்க நேரில் அவன் முன்னே போய் நின்று எப்படி என்னை தூக்கி போட்டு விளையாடி விட்டு வீசி விட்டுப்போவாய் என்று சட்டையை பிடிக்க வேண்டும் என்றே மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் இப்போது முழு வட்டம் அடித்து திரும்பி வந்து நின்றன. என்னமோ புரிந்து தான் அவன் விலகியிருக்கிறான். நம்மால் அவனுக்கு பிரச்சனையும் அவமானமும் தான் மிச்சம். நாமாக போய் பிரச்சனையை கூட்டுவது சுயநலம் அதை நான் உனக்கு செய்யவே மாட்டேன்.

நல்ல வேளையாக என்னிடம் இருந்து நீயாக விலகிக்கொண்டாய். நீ விலகாமல் நான் விலக நீ விட்டிருக்க மாட்டாய். உன் கூட இருந்து உன் உலகம் உன்னை விட்டு விலகுவதையும் நீ வருந்துவதையும் என்னால் கண் கொண்டு பார்த்திருக்க முடியாது. நீ நன்றாக இரு.. நீ என் வானில் நிலவு. தூரமாய் இருந்தலே விதி.

அவள் அதன் பிறகு அழவில்லை.  அன்று மாலை விரிவுரை முடிய வீட்டுக்கு போக மனதில்லை அவளுக்கு. நேற்றுவரை தன்னுடைய கிட்டார் சத்தத்தை பின் தொடர்ந்து போகும் ஏக்கம் இருந்தது. நேற்றிரவோடு மனதின் அறைகளில் எல்லாம் நிசப்தமாயிருந்தது. திரும்ப அந்த சத்தம் இப்போதைக்கு கேட்கும் என்றோ மீண்டும் எழுத ஆரம்பிப்போம் என்றோ அவளுக்கு நம்பிக்கையில்லை.. ஆகவே உத்தராவை தேடிக்கொண்டு அவள் வீட்டுப்பாதைக்கு திரும்பினாள் ரூஹி

அகம் - 15

யுதிஷ்டிரா வழக்கமே இல்லாத வழக்கமாய் காலை எட்டுமணியில் இருந்து அலுவலகத்தில் வந்து உட்கார்ந்திருந்தான். எரிச்சல், கோபம். எல்லார் மேலேயும் ஏறி விழச்சொன்னது. அவள் மேல் கோபமாய் வந்தது. அவன் தான் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் என்பதை மறந்து போய் அவளை திட்டிக்கொண்டிருந்தான்.

‘நடப்பதை பார்த்துக்கொண்டே தானே இருப்பாய். ஒரு வார்த்தை நீ ஒகேவாக இருக்கிறாயா என்று கேட்க தோன்றவில்லையா ரூச்சிம்மா உனக்கு? ஒருத்தன் இருந்தானே, இருபத்து நாலு மணிநேரமும் நம்மை சுற்றினானே.. திடீரென்று போய்ட்டான்..என்ன ஏது என்று பார்ப்போம்? ம்ஹ்ம்ம் அது வேண்டாம் ஒரு ஹலோ சொன்னால் குறைந்தா போய்விடுவாய்..’

அவளை இறக்கி விட்டு வந்து நாற்பத்திரண்டு மணிநேரங்கள் கடந்திருந்தன. ஒரு தொடர்புமே அவர்களுக்கிடையில் இல்லை. அவளுக்கு அவன் மேலான தேடல் இல்லாத பட்சத்தில் நான் என்றைக்குமே அவளை தொல்லை செய்ய மாட்டேன் என்று நினைத்திருந்தவனுக்கு முழுதாய் இரண்டு நாட்கள் முடிய முன்னரே என்னால் முடியுமா என்ற கேள்வி அவனை தின்ன ஆரம்பித்து விட்டிருந்தது.

இத்தனை காலமும் தனியாய் இருந்த அவனுடைய உலகத்தில் வர்ணங்கள் இருக்கவில்லை என்றே அவனுக்கு தெரியவில்லை. இவள் வந்து என் உலகத்தை மொத்தமாய் மாற்றி வர்ணங்களை பார்க்கவைத்து அடுத்து என்ன செய்வேன் என்று கூட தெரியாத நிலையில் ஆக்கிவிட்டு விட்டாள்.

உலகின் மொழிகள் எல்லாவற்றையும் விட இயற்கை பேசும் மொழியை அதிகம் புரிந்து கொள்பவன் நான் என்று நினைத்திருந்தேனே. என்னை சூழ இருந்த யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை. நானும் அவர்களை புரிந்து கொள்ளவில்லை. சுய பச்சாத்தாபமே விஞ்சி நின்றது

இத்தனை வருடங்கள் கூட இருந்தேனே. ஒருவருக்குக்கூடவா என்னை புரியவில்லை? ப்ச் அவர்களெல்லாம் போகட்டும். இப்போதைக்கு அவன் மனது ஒரே ஒருத்தியை தான் தேடியது. அவள் மட்டும் அவனோடு கூட இருந்தால் அவனது வாழ்க்கை மீள லயத்துக்கு மீண்டு விடும்.

விட்ட கணத்தில் இருந்து ஆளை விட்டால் போதும் என்று மறைந்தே போனாள்...அப்படியானால் இதுவரை நீ என்னோடு வந்ததெல்லாம் என் வற்புறுத்தலுக்காகத்தானா? என்று ஏக்கமாய் கேள்வி பிறந்தாலும் அதையும் மனது ஏற்கவில்லை. அவளது கண்களின் சிரிப்பு, பாவனைக்காய் வராதே.

வழக்கமாய் இப்படியெல்லாம் உட்கார்ந்து ஏங்குபவன் யுதி அல்ல. ஏதாவது வேண்டுமென்றால் பின்னாலேயே போய் கேட்டு வாங்கிக்கொள்பவன். இப்போதோ ஒரே சமயத்தில் வந்த ஏகப்பட்ட நிராகரிப்புக்களில் கலங்கிப்போயிருந்த மனது, தனக்கான மருந்து அதுவாய் வரவேண்டும் என்று ஏங்கியது.

வெளியே கேட்ட சலசலப்புக்களை உணர்ந்து நிமிர்ந்தவன் அபியும் அவள் பின்னாலே உத்தராவும் அறைக்குள் நுழைவதை கண்டு

“ஹாய் உன்னி” என்றான் முகபாவத்தை சாதாரணமாய் மாற்றிக்கொண்டு. அபியின் கண்கள் அவன் மேலேயே ஆராய்ச்சியாய் படிவதை உணராதவன் போல உத்தரா மேலேயே அவன் கவனம் இருந்தது.

ஏக கோபத்தில் இருந்தவளின் முகம் சிவந்திருக்க குற்றஞ்சாட்டும் விழிகள் அவனிலே பதிந்திருந்தது. அவனது டேபிளில் வந்து முட்டி நின்று கொண்டு கையை நீட்டி

“மனுஷனா நீ?” என்று கேட்டாள் அவள்

வழக்கமான மரியாதைப்பன்மை எங்கே போனதென்றே தெரியவில்லை. யுதி அதையெல்லாம் கவனிக்கும் நிலைமையிலும் இல்லை. உத்தராவின் வரவு அவளின் மற்றப்பாதியை அளவுக்கதிகமாய் நினைவு படுத்தி அவனை வருத்தப்படுத்த ஆரம்பித்திருந்தது.

“ஏய் உதி!” என்று கண்டிப்பாய்  அபி இடையிட்டதை கூட அவள் பொருட்படுத்தவில்லை.

அதெல்லாம் சரி பர்சியன் பூனைக்கு பூனைப்படை வரும். அதுவும் பூனைப்படையாய் போகும். இவளுக்காய் தானே முதல் தடவை என்னை பார்க்கவே வந்தாள். அவன் மனம் ஞாபகங்களில் மிதக்க ஆரம்பித்திருந்தது. எனக்கு தான் யாருமில்லை. இதோ நிக்கிறான் பார் தடிமாடு! அவன் அபியை முறைத்தான். அவளை அழகாய் கூட்டிட்டு வந்து யுதியை  திட்ட விட்டுட்டு மறிச்சு பிடிக்கிறானாம். அடேய்.

உத்தரா நெருங்கி வந்து நின்றது கூட அவளை ஞாபகப்படுத்தி தொலைத்தது. வழக்கமாய் உத்தரா ஏதும் சண்டைக்கு வந்தால் அவள் ரகசியமாய் கையை பிடித்து அடக்குவாள், அவள் கண்கள்... ஹையோ  இரண்டே நாளில் என்னை இப்படி ஏங்கி புலம்ப வைத்து விட்டாளே..ராட்சசி வந்து தொலைடி  

“பார்க்க எப்படி தெரியுது?” அவனும் கடுப்பாய் பதில் சொன்னான்

“நீ ஏன் அவளை ஹர்ட் பண்ணினாய்? உனக்கென்ன அவளை பார்த்தா பொம்மை மாதிரி தெரியுதா? நீ நினைச்ச நேரம் தூக்கி வைக்கவும் பிடிக்கலைன்னா தூக்கி போடவும்?” அவள் ஆவேசமாய் கேட்கவும் யுதி அவளை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

அபியோ தலையில் கைவைத்துக்கொண்டு மூலையில் இருந்த சேரில் போய் உட்கார்ந்து விட்டான்

“பதில் சொல்லப்போறியா இல்லையா... நான் கூட உன்னை நம்பிட்டேன் தெரியுமா? ஏன் இப்படி பண்ணின.. நிஜமாவே எல்லாமே அந்த உப்பு பெறா சாலஞ்சுக்காகவா. நான் நம்ப மாட்டேன். உண்மையை சொல்.. எதுக்காக இப்படி பண்ணின. அட்லீஸ்ட் என்கிட்டே சொல்லுங்க.. ப்ளீஸ்” அவளின் குரலோடு கண்ணும் கலங்குவதை கண்டும் எந்த பதிலும் சொல்லாமல் கதவையே வெறித்திருந்தான் யுதி.

அவள் மனம் தெரியும் வரை அவன் யாரிடமும் தங்கள் இருவரையும் பற்றி பேசத்தயாரில்லை

“நிஜமாவா? கேட்கிறேன்ல.. “ அவள் கண்கள் முழுதாய் பளபளக்க

நான் தான் அவகிட்ட சொல்லிட்டேன்ல” இவன் குரலும் வெறுமையாய் ஒலித்தது

“அப்போ நிஜமே தானா.. நீ மாறிட்டேன்னு நம்பினோம்” அவள்  கைகளை ஒரு மாதிரி தவிப்பாய் அசைத்தபடி சொல்ல

ஜோக் இஸ் ஒன் யூ கேர்னல்” என்றான் இவனும்

“போடா பன்னி!” இப்போது வழியவே ஆரம்பித்த  கண்ணீரை ஆவேசமாய் துடைத்துக்கொண்டவள்

“வர்றவன் போறவன்லாம் அவளை திட்டிட்டு போறான். உன்னை நம்பி உன் பின்னால வந்ததுக்கு இப்போ உன் பிரச்சனை எல்லாம் அவளை துரத்துது. ஒரு உப்பு சப்பில்லாத சாலஞ்சுக்காக அவளை இழுத்து நடுத்தெருவுல விட்டுட்டேல்ல. இனிமே அவ பக்கம் தலை வச்சு படுத்துப்பார் நானே உன்னை கொன்னுருவேன்” விரலை முன்னால் நீட்டி எச்சரித்து விட்டு கதவை அடித்து சாத்திக்கொண்டு அவள் திரும்பிப்போக  “உதி” என்று பின்னால் போன அபிக்கும் கிழி விழுவதும் அவன் சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி வரும் காலடிச்சத்தங்களும் கேட்டன.

இவன் மனது எதிலும் ஈடுபடவில்லை. என் பிரச்சனை அவளை துரத்துதா? உத்தரா சொல்லிவிட்டுப்போனதையே மனம் மீண்டும் மீண்டும் கிரகிக்க முயன்றுகொண்டிருக்க அதற்குள் ஆயிரம் விபரீத கற்பனைகள் தோன்றி விட எழுந்தே விட்டான் யுதி.

“எருமை. உன் கிட்ட இருந்து தப்பி ஒரு லவ்வை  பண்ணிடலாம்னு தனியா போயும் விதி மறுபடியும் உன் கூடவே என்னை கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்குது... நீ பண்ணின  அநியாயத்துக்கு அவ என்னை திட்டிட்டு போறா” என்று முணுமுணுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்தான் அபி

“அதை விடு..இப்ப அவ என்ன சொன்னா?” அவசரமாய் கேட்டான் யுதி

“உனக்குத்தான் அந்த பொண்ணு தேவையில்லையே..இனி அதெல்லாம் உனக்கெதுக்கு” அவன் வெறுப்பேற்ற பல்லைக்கடித்தான் யுதி

“என்னை கொலைகாரனாக்காம சொல்லித்தொலை” அவன் பார்த்த பார்வையில் உனக்கு தெரிந்த மறுகணமே அந்த செய்தி என்னிடம் வந்து சேர்ந்திருந்திருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு இருந்தது

“ப்ரோபெசர் கந்தசாமி இருக்கார்ல. போன வருஷம் மூணு நாள் காதரிங்கை எடுத்து நடத்தினவர். அவர் தான் ரூஹியை போய் பார்த்து மிரட்டிருக்கார். அவன்கிட்ட போய் சொல்லு எங்க கூட வம்புகு வந்தா அவனால ஒரு எழுத்து பதிப்பிக்க முடியாது. இன்னொரு தடவை உன்னை பத்தி ஏதும் கேள்விப்பட்டா யூனிவர்சிட்டில பிரச்சனை வரும்கிற போல பேசிட்டு போயிருக்கார் போல ..” அபி மெதுவாய் சொல்லி முடிக்க

கோபம் உச்சந்தலையில் ஏறிக்கொள்ள “அந்தாளை தேடிப்பிடிச்சு நாலு வைக்காம விடமாட்டேன்டா” என்று சட்டையை மடக்கிக்கொண்டு வெளியேற போனவனை அழுத்தி பிடித்து மீண்டும்  உட்கார வைத்தான் அபி.

“ஏன்டா, பைத்தியம் பிடிச்சிடுச்சா உனக்கு? யோசிச்சு தொலைய மாட்டியா?” என்று அவன் கத்த

“என்ன தைரியம் இருந்தா அவகிட்ட போய் மிரட்டுவான்? அவளுக்கு அந்த வேலை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? அங்கே போய் கண்டவனும் அவளை மிரட்டுறதுக்கு அவ என்ன யாரும் இல்லாத ஆளா? நீ தெரிஞ்சதுமே என் கிட்ட சொல்லிருந்திருக்கணும். நான் போய் அவன் சட்டையை பிடிக்காம விடமாட்டேன்.” இவன் பதிலுக்கு சத்தம் போட

“எங்களுக்கும் புரியுது யுதி. நான் இதனால தான் உன்கிட்ட உடனே சொல்லல. அந்த மனுஷன் சீனியர் ப்ரொபெசர்டா.. ரூஹி ரொம்ப ஜூனியர். அவர் ஏதாவது சொன்னா இவளை கேள்வியே கேட்கமாட்டாங்க. தூக்கிருவாங்க. காரியர் போய்டும். இப்போ நீ போய் அந்த ஆளோட சண்டை போட்டா அவளுக்கு தான் மறுபடியும் யூனிவர்சிட்டில பிரச்சனை வரும். அவ வந்து உன்னை ஏத்தி விட்டதா தான் எல்லாரும் நினைப்பாங்க. புரிஞ்சுக்க.” அமைதியாய் புரிய வைக்க முயன்றான் அபி

தலைக்குள் அவன் சொன்னது ஏறினாலும் மனதுக்கு புரிய மாட்டேன் என்றது. என்னால் அவளுக்கு எவ்வளவு கஷ்டம்!

“அப்போ அவனை சும்மா விட சொல்றியா? ரூச்சி நம்மை மாதிரி இல்லைடா. கூட்டத்துல தனியா தெரிஞ்சாலே அவளுக்கு கஷ்டம்... அவ கிட்டப்போய் என்னல்லாம் பேசியிருக்கான். யார் யாரை அழிக்கிறது? என்னை மிரட்டறதுன்னா என் கிட்டத்தானே வந்துருக்கணும்? சின்ன பொண்ணு கிட்ட போய் பேசுவானா? அவன் வயசென்ன அவ வயசென்ன?” இவன் புலம்ப

“இப்போதைக்கு அந்த ஆளை நீ போய் பார்த்தாலே பிரச்சனை  ரூஹிக்கு தான் வரும். குறைஞ்சது அவ அங்கேயாவது நிம்மதியா இருக்கட்டும். நீ பேசாமல் உட்கார். நமக்கு ஒரு சந்தர்ப்பம் வராமல் விடாது”

அவனை அழுத்தி தன்னருகே அமர வைத்து விட்டு காவலுக்கு இருப்பது போல அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தவனை செய்வதறியாமல் ஏறிட்டு பார்த்தான் அவன்.

“வேறே என்ன ஆச்சு?”

“அதெல்லாம் பேஸ்புக் வெத்து வெட்டு மிரட்டல்கள். நான் அவகிட்ட பேசி ஹான்டில் பண்ணிட்டேன் நீ விடு அதையெல்லாம். அவளை கொஞ்ச நாளைக்கு மெசெஞ்சரை எடுக்க சொல்லிட்டேன். அடங்கிடும் விடு”

ஐயோ. அவனே இதை நினைத்து தான் தூக்கமின்றி தவித்திருந்தான். நடந்து விட்டதா,,,மாட்டேன் மாட்டேன் என்று அடம்பிடித்தவளை இப்படி கொண்டு போய் மாட்டி விட்டு இப்படி கையாலாகாதவனாய் உட்கார்ந்திருக்கிறேனே,  இதில் அவள் நம்மை விசாரிக்கவில்லை என்று திட்ட வேறு செய்தோம் என்றெண்ணி இவன் தலையை கையில் பிடித்துக்கொண்டு குனிந்திருக்க

“ப்ச். கொஞ்ச நாளைக்கு நம்ம சைலன்டா இருப்போம். ரூஹி பிலிப்பைன்ஸ் போறா போலிருக்கு நாளைக்கு. என்னமோ கான்பரன்ஸ் என்று உதி சொன்னா.. அவ ஒரு வாரம் இங்கே இல்லாம இருக்கறது நல்லது தான்” என்று அபி மெதுவாய் சொன்னான்

டீப்பாயையே வெறித்து  பார்த்திருந்தான் அவன். எல்லாம் கைமீறிப்போய்விட்டது போல ஒரு உணர்வு. ஒரு வார்த்தை அவனிடம் சொல்லவில்லையே.. இப்படி அந்த ஆள் மிரட்டியதை கூட அவள் சொல்லவில்லை. இவனிடம் இருந்து தப்பித்தால் போதும். இவனாலே இத்தனை பிரச்சனை நமக்கு தேவையா இது என்று யோசிப்பாளோ. அவளுண்டு அவள் வேலையுண்டு என்று தன் பாட்டுக்கு சுற்றிக்கொண்டிருந்த பெண்ணுக்கு இத்தனை பிரச்சனைகளை ஒரே மாசத்தில் கொடுத்து விட்டேன்

பிலிப்பைன்ஸ்.. உதடுகள் சலிப்பாய் இழுத்துக்கொண்டன. ஆன்லைனில் பங்குபற்ற போகிறேன் என்று தான் சொன்னாள். அங்கே எனக்கு நல்ல நண்பி ஒருத்தி இருக்கிறாள். போக ஆசை, ஆனால் இப்போதைக்கு நேரமில்லை என்று அவள் உதட்டை பிதுக்கியதும் நினைவிருந்தது. இப்போது நேரிலேயே போக ரெடியாகி விட்டாளா? இது டிப்பிக்கல் ரூச்சி மூவ். அவள் அப்படித்தான் ஒளித்துக்கொள்வாள்

போகட்டும். இப்போதைக்கு நாம் இருவரும் இணைவது முக்கியமில்லை. அவள் பாதுகாப்பாய் மன நிம்மதியோடு இருப்பது முக்கியம். அவள் உள்ளூரிலேயே இருந்தால் நானும் அவள் நன்றாக இருக்கிறாளா? என்ற பயத்திலேயே உயிர் குறைந்து கொண்டிருப்பேன். போய்விட்டு வரட்டும். தேவையில்லாத பிரச்சனைகளில் எல்லாம் மாட்டி மனம் நொந்து போயிருப்பாள். கொஞ்சம் ஆறிக்கொள்ளட்டும். விசித்திரமாய் ஒரு நிம்மதி கூட வந்தது அவனுக்குள்.

அவன் முகத்தையே பார்த்திருந்தானோ என்னமோ

“நீ அவளை மீட்டிங்குக்கு கூட்டிட்டு போனது மகா தப்பு. என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உன் மண்டையிலேயே நாலு போட்டு அறிவு வர வைத்திருப்பேன். போதையில் ஏதும் இருந்தியா நீ.. அறிவு கெட்டவனே.” திடும்மென அவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்த அபி கத்தவும்

“நான் இந்த அளவு இருக்கும்னு நினைக்கலையேடா..நானும் நீயும் போய் பேசினதுக்கு பிறகு முன்னை போல இல்லாவிட்டாலும் பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைச்சிட்டேன். இவளை வில்லியா ஆக்கி அடிப்பானுங்கன்னு நான் கனவா கண்டேன்?” அவன் இயலாமையில் மெல்லிய குரலில் கேட்டான்

“என்னடா.. அந்த பையனை தட்டினது அவ்வளவு தப்பா? அவன் பேர் கூட இவருக்கு தெரிஞ்சிருக்காதுடா.. எவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கிட்டாங்க. zombies மாதிரி கொஞ்சம் கூட யோசிக்காமல் எல்லாரும் வெறியா திரியுற அளவுக்கு நான் என்னடா பண்ணிட்டேன்?” அவன் ஏக்கமாய் கேட்க

“எல்லாம் சகவாச தோஷம். அவரை இப்போ பாடிகார்ட்ஸ் இல்லாம பார்க்க முடியாது. ராம் அன்ட் கோ..” என்றான் அபி எல்லாக்கேள்விகளுக்கும் ஒரே பதிலாய்

விரக்தியாய் சிரித்தான் யுதி. “சுயபுத்தி இல்லைன்னா செய்யிறதுக்கு ஒண்ணுமே இல்லை. இவருக்குமே அவனுங்களை பிடிக்காதே..இப்போ என்னடா திடீர் பாசம்?”

“திடீர்னு எல்லாம் இல்லை” என்று முணுமுணுத்தான் அபி எங்கோ பார்த்தபடி

“என்னடா சொல்ற?” யுதிக்கு பேரதிர்ச்சி

“ஹ்ம்ம்.. நமக்குத்தான் கண்ணு தெர்ல. முட்டாள் மாதிரி இருந்திருக்கோம்”

மேலும் சொல் என்பது போல இமை சுருக்கி பார்த்திருந்தான் யுதி

“இது எல்லாம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகுது”

“அக்காடமி அவார்டோடவா?”

எங்கோ பார்த்திருந்தான் அபி. அவனுக்குமே அந்த பேச்சை எடுக்க முடியவில்லை, பாசம் வைத்து எல்லாம் விட்டு காலடியில் உட்கார்ந்து கற்காதது ஒன்று தான் குறை. வலிக்கும் தானே..

“அவரா? அப்படி பேச்சுக்காகக் கூட சொல்லாதடா.. அவர் வாங்காத விருதுகளா? அங்கீகாரங்களா? என்னுடைய விருது அவருக்கு கால் தூசி போல.. நம்மை பார்த்து போயும் போதும் அதுக்கா பொறாமைப்படுவார்?” இல்லையென்று சொல்லி விடேன் என்பது போல் இதயம் ஏங்க அபியின் முகத்தையே இவன் பார்க்க

அபி பேசாதிருந்தான்

“என்னமோ சொல்ல வந்தேல்ல. பேசேன்டா. எனக்கு யோசிக்க கூட முடியலை..”

“பொறாமைன்னு நினைக்கல யுதி..ஈகோ இருக்கும்.. நம்ம ஒருத்தனை குழந்தைல இருந்து பார்க்கிறோம். நம்ம முகத்தையே பார்த்து வளர்றான். அவனுக்கு நம்மளே எல்லாம் செஞ்சு கொடுத்து மேலே ஏத்தி விட்டு அவன் மேலே இருக்கறதா ரசிப்போம். ஏன் தெரியுமா? என்ன தான் பாசம் இருந்தாலும்  என் மனசின் ஓரம் அது என்னுடைய வேலைன்னு ஒரு சந்தோஷம், அவனுடைய வெற்றியில் எனக்கும் பங்கிருக்கு. நான் இல்லைன்னா அவன் அங்கெல்லாம் நினைச்சு பார்க்க முடியாதுன்ற ஒரு நிதர்சனம்” அபி சொல்லிக்கொண்டே போக

ஏதோ புரிந்தது அவனுக்கு

“என் கூடவே இருக்கான். ஆனா எதுக்கும் என்னை எதிர்பார்க்க மாட்டேங்குறான். அவனா செஞ்சு மேலே போறான். நம்மை இனிமே மதிக்க மாட்டானோன்ற ஒரு இன்செக்கியூரிட்டி வந்துடுச்சுன்னு நினைக்கிறன். என்னதான் பெரிய மனுஷன்னாலும் அவரும் மனுஷன் தானே.. அப்போ இருந்தே இவனுங்க நெருங்கிட்டானுங்க. நமக்குத்தான் கண்டு பிடிக்க தெரியல.. இப்போ நிறையப்பேர் கிட்ட பேசும் போது தான் ஒண்ணொண்ணா வெளியே வருது”

அவருடன் விட்டுப்போன வெள்ளிக்கிழமை தேனீர் விருந்துகள், அவர்கள் இருவரின் நேரங்கள் எல்லாம் ஒன்றொன்றாய் நினைவு வந்தது யுதிக்கு. இதை நாம் ஏன் வேறு கோணத்தில் பார்க்க மறந்தோம். அந்த அளவுக்கு அவர் மேல் நம்பிக்கை!

“ நீ தான் பெரிய தலைன்னு நீ நினைச்சுக்குற. க்ரூப்ல இப்போ எல்லாரும் உன் பேச்சைத்தான் கேட்குறாங்க. அப்படி அவரை ஏற்றி விட்டுக்கொண்டிருக்கும்  போது நீ அவரை கேட்காம அந்த சித்தார்த் மேல கை வச்ச. அந்த நேரம் சரி தப்பு மறந்து போகும்டா.. நீ பெரியவனா, நான் பெரியவனா..என் க்ரூப்ல இருக்கவனை என்னை மீறி நீ தொடுவியான்னு ஒரு சின்னப்பிள்ளத்தனமான கோபம். அவனுங்க என்ன தான் சொன்னாலும் நீ அப்படி செய்வேன்னு இன்னும் அவர் மனசுக்கு ஏத்துக்க முடியல போலிருக்கு. இவ வந்த பிறகு இவளால தான் அவன் இப்படி ஆயிட்டான்னு சொல்லிட்டிருக்கார்”

என்னடா.. நான் என்ன அவர் லவ்வரா? வேறொருத்தி கூட போயிட்டேன்னு கோபப்பட..என்று யுதி எரிந்து விழவும்

சிரித்தவன் “இருக்காதா பின்னே..இந்த ஒன்றரை மாசத்துல நான் கூட இரண்டு தடவை அவரை போய் பார்த்தேன். நீ அந்த பக்கமே போகல..ரூஹி மேடம் பின்னாடியே சுத்துனா?” என்று கேட்கவும்

உதட்டை கடித்தான் யுதி. நிஜம் தான். அவன் உலகமே அவளை சுற்றியதே..அவளை அழைத்து செல்ல காரணம் வேண்டும் என்பதற்காகவே சும்மா எதையாவது கண்டுபிடித்து அழைத்து செல்பவன் ஆயிற்றே.

“அவர் பெரிய மனுஷன். நம்ம சின்னப்பசங்க அப்படித்தான் இருப்போம். அதுக்கு இப்படி சின்னத்தனமா அவ மேல கூலிப்படைய ஏவி விடுவாரா? நான் கமிட் ஆனா சந்தோஷப்படக்கூட வேண்டாம். இப்படி கேவலமா இறங்கணுமா?” சொல்லிக்கொண்டே போக இவனுக்கு திடும்மென ஒரு ஞாபகம் வந்தது

“ஒருநாள் இந்த தாடிப்பையன் ஒருத்தன் இருப்பானே, ராம் காங்க்ல, அவனை நானும் இவளும் ஒரு ரெஸ்டாரன்ட் போகும் போது பார்த்தேன். ஜோக்னு சொல்லி அவளையும் என்னையும் வச்சு என்னமோ கேவலமா சொன்னதால அடி வாங்கிடுவ போய்டுன்னு சொல்லிட்டுபோயிட்டேன். இப்போ தான் ஞாபகம் வருது. நான் இவளை பத்தி குருஜிக்கு  சொல்லவே இல்லை. எல்லாம் நல்லாவே தெரிஞ்சு தான் வச்சிருக்கார்”

“பார்த்தியா? ஒண்ணொண்ணா ஏத்தி வச்சு ப்ளான் பண்ணி நம்மளை வெட்டி விட்டிருக்காங்க”

நம்மை சுற்றி இத்தனை நடந்திருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு போதாக்குறைக்கு அவளையும் கொண்டு போய் மாட்டி விட்டிருக்கிறேன். சுயநலவாதியா நான்?

யோசித்துக்கொண்டே இருந்தவன் “ஒரே ஒருத்தர் கூடவா நான் அப்படியில்லைன்னு சப்போர்ட் பண்ணலை? அவர் மூலமா ஒண்ணா சேர்ந்தவங்க தான் நாங்க. இல்லைங்கல..ஆனா நமக்குள்ள உருவான அந்த நட்பு பாசம் எல்லாமே பொய் தானா? அவர் இல்லைன்னா அது எல்லாம் இல்லாம ஆயிடுமா? செந்தில் அண்ணா கூட என்னை கூப்பிட்டு திட்டினார்டா. நான் அங்கேயிருந்து வந்ததுக்கு காரணமே அதுதான். எனக்கு குருஜி பேச்சுக் கூட பாதிக்கலைன்னு வையேன்..அவர் இப்படித்தான் எக்ஸ்ட்ரீமா நடந்துப்பார்னு தெரிஞ்சது தானே. இவர் பேசினதும் தான் போறேன்னு கிளம்பினேன்” என்றான்

“சின்ன மட்டத்துல நிறைய பேர் உனக்கு சப்போர்ட் பண்ணத்தான் செய்றாங்க..” என்று முணுமுணுத்த அபி “பெரிய மட்டத்தில் நிறைய பேர் வெளியே ஒப்பனா பேச பயப்படுறாங்க.. அவரை எதிர்த்து நம்மளை சப்போர்ட் பண்ண இப்போதைக்கு யாருக்கும் தில் இல்லை” அபிக்கும் செந்தில் அண்ணா பற்றி பேச மனதில்லை போலும்.. அவரின் பேச்சை எடுக்காமலே தவிர்த்தான்

மினி ப்ரிட்ஜில் இருந்து கோலாவை எடுத்து குடித்தபடி இருவரும் மௌனமாய் இருக்க யுதி யோசித்துக்கொண்டிருந்தான்.

இத்தனை பிரச்சனைகள் அவனை சுற்றி ஓடும் போது இனிமேல் நாமாக இப்போது அவளை தேடிப்போவது அவள் முதுகில் டார்கெட்டை கட்டி விடுவது போலத்தான் ஆகும். என் பாரங்களை பயமின்றி எதிர்கொள்கிறேன் என்று வந்தாளானால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்.  அவன் முடிவு செய்து விட்டான்

மொபைலை எடுத்து அவளுடைய உள்பெட்டியை திறந்து டைப் பண்ண ஆரம்பித்தான்.

“நான் உன்னை ரொம்ப ரொம்ப காயப்படுத்தி கொஞ்சம் கூட யோசிக்காமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டி விட்டு விட்டேன். என்னை மன்னித்து விடு. இனிமேல் என்னால் உனக்கு பிரச்சனை வராது. நீ எதையும் பற்றி யோசிக்காமல் போயிட்டு வா.. சந்தோஷமா இரு. இந்த பிரச்சனை என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை உன் பங்கு சிறிதும் இல்லை. யோசிக்காதே. சாரி” என்று அனுப்பி வைத்து விட்டு ஒற்றைக்கோட்டோடேயே இருந்த செய்தியை சிறிது நேரம் பார்த்திருந்தவன் பிறகு யன்னலை வெறிக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் அறைக்கதவு மீண்டும் தட்டப்பட இந்த நேரம் யார் என்று யோசித்த படி கமின் என்று குரல் கொடுக்க உள்ளே வந்த செந்திலை கண்டதும் இருவரும் கொஞ்சம் அதிர்ந்து தான் போயினர்.

வந்தவர் வந்த வேகத்தில் கண்ணில் டீப்பாயில் இருந்த பிளாஸ்டிக் பூங்கொத்து தான் பட்டிருக்கும் போல. கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அபியை சாத்த ஆரம்பித்து விட்டார்.

யுதி பேசாமல் பார்த்திருந்தான். நேற்றைய ஆன்லைன் மோதல் ஒன்றுக்கு தான் அபிக்கு இந்த அடி. மாறி மாறி பந்தாக உருட்டப்படுவதில் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாயிருப்பார் போலிருகிறது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. zombie தான் ஆவேன் என்றால் ரத்தம் குடிக்கத்தான் வேண்டும்

“என்னடா என்ன பேசற.. நான் எடுபட்டு போனவனா... எல்லாம் வேஷமா? எதிர்பார்த்து பழகுறவனா? என் தம்பிங்கடா நீங்க ரெண்டு பேரும்! என்னையே அப்படி ஒரு வார்த்தை கேட்க உனக்கு எப்படி மனசு வந்தது? என்று அபியை கேட்டபடி பூக்கள் ஒவ்வொன்றாய் சிதறி விழ அடித்துக்கொண்டிருந்தவர் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு உடையும் நிலையில் இருப்பதை உணர்ந்து கோபம் மறந்து அவரை நெருங்கி வந்து யுதி அவரின் தோளில் கை வைக்க

“எல்லாம் உன்னால தான்டா” என்று பூங்கொத்து அவனிடம் திரும்பியது.

“ஏன் இப்படி பண்ணின? அத்தனை பேர் முன்னாடி,, கோபிச்சிட்டு போற? இவ்வளவு நாள் பழகின பாவத்துக்கு இன்னொரு மூணு மணி நேரம் இருந்தா குறைஞ்சா போயிருப்ப. நீ  போனதுக்கப்புறம் யாருக்குமே பேச மூட் இல்லை. ஏதோ பேருக்கு பேசிட்டு கலைஞ்சு போய்ட்டாங்க. இப்போ கொஞ்ச நாளா எல்லாரும் பேசறதை பார்த்தா எனக்கு எந்த பக்கம் பேசன்னே தெரியலடா..”

ரொம்ப களைத்து போய் இருந்திருப்பார் போலிருக்கு அடிப்பதை நிறுத்தி விட்டு அபியின் அருகில் உட்கார்ந்து தலையை பிடித்துக்கொண்டார்.

“ஒண்ணா தானே இருந்தோம். திடீர்னு என்ன ஆச்சு உங்களுக்கு?” அவர் கேட்க

“அவருக்கு பிடிச்சதால நீங்க எங்களை சேர்த்து வச்சிருந்தீங்க.. இப்ப அவருக்கு பிடிக்கல விலக்கி வைக்கிறீங்க அவ்வளவு தானே” என்றான் யுதி

“அறைஞ்சிடுவேன் ராஸ்கல். அவருக்கு பிடிக்கலைன்ற? அழறார்டா மனுஷன்! பைத்தியம் போல ஏதேதோ பேசி தன்னைத்தானே குறைச்சுக்கிறார்” அவர் சொல்ல இவனுக்கு இரக்கமே வரவில்லை

“சேரக்கூடாத இடம் சேர்ந்தா அப்படித்தான்” என்றான் அபி

“ராமா?”

“ஆமாம். ஏன் உங்களுக்கு தெரியாதா? புதுசா கேட்கிறீங்க?”

“நீ ஏன் அந்தப்பையன் மேல கைவைச்ச? அவருக்கு அவரோட வாசகர்கள் என்றால் எவ்வளவு பிடித்தம் என்று தெரியாதா? ஒருவார்த்தை கேட்டுட்டு பண்ணிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காதே. அவன் யார் உனக்கு?..அந்த பொண்ணு தான் யார்.. நீ ஏன் அவங்களுக்குள்ள தலையிடனும்? அவருக்கு கோபம் வரவேண்டியது நியாயம் தான?” என்று கேட்டவர்  “ராம் அந்த பையனை இவர் கிட்ட கூட்டிட்டு வந்திருப்பான் போல” என்று முணுமுணுத்தார்

“ஓஹோ.. அப்புறம் இவர் அப்படியே அந்த புண்ணிய ஆத்மாவை மன்னிச்சு விட்டிருப்பாரே..சம்மிக்கு மேலே யாரையாவது பிடிச்சிருப்பாரே..அவருக்கா ஆட்களை தெரியாது?” யுதி சொல்லவும்

“நீ ஏன்டா ஒரு மார்க்கமாவே பேசிட்டிருக்க? அவர் உன்னை விட்டு கொடுக்கல.. அந்த பையன் கிட்ட நீ தப்பு பண்ணிருக்க, அதனால நான் தலையிட மாட்டேன்னு சொல்லிருக்கார். உனக்கு இவங்களையெல்லாம் எப்படி பழக்கமாச்சு. முதல்ல மீட்டிங்குக்கு வந்த அந்த பொண்ணு யார் உனக்கு? “ அவர் கோபமாய் கேட்க இவனுக்கும் கோபம் உச்சியில் ஏறிக்கொண்டது

சுழலும் நாற்காலியை இழுத்துக்கொண்டு வந்து அவர் முன்னே போட்டவன் உட்கார்ந்து கொண்டு முன் புறம் குனிந்து அவர் முகத்தையே பார்த்தான். “உங்களை அண்ணன்னு கூப்பிட்டதால இந்த பேச்சை  நான் பொறுமையா கேட்டுட்டு இருக்கேன். ரூச்சி என் உயிர்ணா.. அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுவரை காலமும் என் கூட பழகிருக்கீங்க. நான் யார் பேச்சையும் கேட்கறவனா?” அபியின் கண்கள் விரிந்ததை கவனிக்காமல் அவனையே பார்த்தவரை கோபமாய் பார்த்திருந்தான் யுதி.

“சொல்லுங்கண்ணா..நான் யார் பேச்சையும் கேட்பேனா? நேர்ல போய் கேட்பேனே தவிர இந்த மாதிரி மனசுல ஒண்ணு வச்சு பழகறவன் இல்லை. அந்த பொண்ணு விஷயத்துலயும் சரி மீட்டிங்குக்கும் சரி மாட்டேன்னு அடம்பிடிச்சவளை நான் தான் இழுத்துட்டு போனேன். என்னால தான் அவளுக்கு இவ்வளவு பிரச்சனை” அவன் குற்றம் சாட்ட

.அவர் தவிப்பாய் பார்த்திருந்தார்

“தம்பின்னு நினைச்சேன்னு சொல்றீங்க. யுதிஷ்டிரா அப்படி பண்ணிறவன் இல்லைன்னு அவர்கிட்ட போய் பேசினீங்களா? அவர் என்ன போஸ்ட் பண்ணியிருந்தார் என்று நானும் பார்த்தேன். அதை பார்த்துட்டும் எங்களை கைநீட்டி குற்றம் சொல்லத்தான் வந்திருக்கீங்களே தவிர எங்களுக்காக நிக்கலையே..”

“தம்பி... “

“அந்த பொண்ணை நான் பார்த்தேன் அண்ணா.. அவளோட முகத்தையும் பயத்தை பார்த்த பிறகு எதையாவது செய்யாம வந்திருந்தா நீங்க அன்னிக்கு தூங்கியிருந்திருக்க மாட்டீங்க.. அவ என் கிட்ட சொன்ன கொஞ்சமே கேட்டு என்னால தாங்கமுடியலை. அந்த நாய் ஒரு கேவலம் கெட்டவன். நீங்களா இருந்தாலும் அதையே தான் பண்ணிருப்பீங்க..”

“அப்போ அவன் எந்த குரூப் எல்லாம் எனக்கு மனசுல படவே இல்லை. குருஜி தொடங்கி நம்ம க்ரூப்ல முக்கால்வாசி பேர் அவன் பிரன்ட் லிஸ்ட்ல இருக்காங்க. இப்படி மானத்தை வாங்கறான்னு நினைச்சு தான் நான் செஞ்சேன். என்னை போய் தப்பா நினைச்சிட்டீங்கல்ல?” அவன் குரல் உடைந்து போனது

டேய்.. அவர் அவன் கையை பிடிக்க முயல உதறி விட்டவன் மீண்டும் தன்னை மீட்டுக்கொண்டு விட்டான்

“விடுங்கண்ணா. நான் பழகின உலகத்தை காட்டணும்னு நினைச்சு ரூச்சியை நான் முதல் முதலா மீட்டிங்குக்கு கூட்டிட்டு வந்தேன். நல்லா வரவேற்பு கொடுத்தீங்க எல்லாரும் அவளுக்கு. மத்தவங்க விஷயத்தை காதால கூட கேட்கமாட்டா அவ. அவளைப்போய் கண்டவனும் திட்டி டார்ச்சர் பண்றான். அவளுக்கு நல்ல பரிசு கொடுத்துட்டேன்.. எந்திரிச்சு வெளியே போங்க சார். உங்க யார் சகவாசமும் எங்களுக்கு தேவையில்லை.. இனிமே அந்த க்ரூப் இந்த க்ரூப்னு சொலிட்டு இங்கே வராதிங்க இதை நாங்க சொன்னோம்னு அவர் கிட்டயும் சொல்றதுன்னா சொல்லலாம். ஐ டோன்ட் கேர்”  என்ற படி வாசலை காட்டினான்.

அவர் உதடு நடுங்க “மன்னிச்சிடுடா” என்றார்  

இவர்கள் இருவரும் எதுவும் பேசாதிருக்கவே தளர்ந்த தடையுடன் எழுந்து கதவோரம் போனவரை ஒருநிமிடம் என்று நிறுத்தினான் யுதி.

“ரஞ்சன் ஐயாவுக்கு நல்ல பரிசு கொடுத்திருக்கீங்க எல்லாரும். இதையும் போய் சொல்லுங்க.. “ என்று போட்டுடைத்தே விட்டான்

“என்னடா சொல்ற?” அவர் அதிரவும்

“பின்னே அவர் பொண்ணைத்தானே விரட்டினீங்க...”அவனது உதடுகள் இகழ்ச்சியாய் சுழிந்தன.

நம்ம ரூஹி ரஞ்சன் ஐயா பொண்ணா..யாரும் சொல்லவே இல்லை? அபி அதிர

இவன் தலையாட்டினான். “அவ அதைப்பற்றி சொல்றதில்லை, ஏன்னு நானே யோசிச்சிருக்கேன். இப்போ தான் தெரியுது. அவ சரியாத்தான் எங்க எல்லாரையும் பற்றி கணிச்சிருக்கா”

“இது வேற லெவல் சிக்கல், பாவம்டா ஐயா கேள்விப்பட்டா எப்படி அவர் மனசு கஷ்டப்படும்?” அபி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

“ஐயோ.. ஏன்டா இதை நீ ஒரு வார்த்தை அங்கேயே சொல்லியிருந்தா எல்லாம் முடிஞ்சிருக்குமேடா..” செந்தில் தவிப்பாய் கேட்க

“அவங்கப்பா ரஞ்சன் ஐயாவா இருந்தா கேள்வியே இல்லாம உடனே அவ நல்லவளாயிடுவாளா? நல்லா இருக்கு சார் உங்க நியாயம். அவ சொல்ல விரும்பலை.. அதனால நான் சொல்லல அவ்வளவு தான். இப்போ ஏன் சொல்றேன்னு பார்க்கிறீங்களா? அது தான் எல்லாம் முடிஞ்சு போச்சே.. சொல்லி வைங்க அந்த கந்தசாமி கிட்ட, இன்னொரு தடவை அவ கிட்ட போனான்னா அவன் வீட்டுக்கே போய் அடிப்பேன். என்னை எழுத விடமாட்டானாம், ஒண்ணுமில்லாம ஆக்குவானாம்!”

“பழகும் வரைக்கும் நேசமா உண்மையா பழகினேன். யாருக்கும் பதில் சொல்லி சண்டை போட விரும்பலை. தான் நான் ஆன்லைன் பக்கமே வராம இருக்கேன். சரி உங்களுக்கு நாங்க  வேணாம்னு சொல்றீங்க. நாங்க தான் விலகிட்டோமே..அப்புறம் அவர் அழுகைக்கு அர்த்தம் இல்லை அண்ணா.. தப்பு பண்ணினவனுக்கும் அழுகை வரும். அழுகிறவனை பார்த்தெல்லாம் அனுதாப்படுறதுன்னா ....... புரியும்னு நினைக்கிறேன்”

அவர் வந்ததை விட மோசமான நிலைமையில் முகமே கறுத்து திரும்பிப்போக இருவரும் மௌனமாக சில வினாடிகள் அமர்ந்திருந்தனர். இறந்து போன உறவொன்றிற்காய் மௌனமாய் துக்கம் அனுஷ்டிப்பதை போல..

“பாவம் நல்ல மனுஷன்”

“நம்மை மாதிரியே..”

“நம்ம தாங்கிக்கிட்டோம். இவர் தாங்க மாட்டார்”

“ப்ச்”

மேலும் சில நொடிகள் கடந்த மௌனத்தின் பின் “யுதி..நான் சொன்னா கேப்பியா? ரூஹிட்ட போய் பேசு” என்றான் அபி

“ப்ச். அதை பத்தி மட்டும் பேசாத. இங்கே நடந்த எதுவும் அங்கே போகக்கூடாது. என்னை பத்தின பேச்சே அவகிட்ட யாரும் எடுக்ககூடாது. அவ திரும்பி வந்தப்புறம் எங்காவது எங்களை பார்க்க வைக்கறது..பேச வைக்கிறதுன்னு குறளித்தனம் பண்ணினீங்க, நான் ஐஞ்சாறு வருஷத்துக்கு எங்காவது கண்காணாத இடத்துக்கு போய்டுவேன்” அவன் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

 

nanri vanakkam.

happaada successful a  pirichu vittachu 😈😈

அகம் முழுக்கதை

 ஹாய் மக்கள்ஸ்..  இங்கே அகம் முழுக்கதையை படிக்கலாம்.  https://drive.google.com/file/d/1F2OeFSh-OyvsYKjmqq8N1BVfpVGPYWTm/view?usp=sharing இரண...